பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176


லட்சுமியின் காதலன் ரங்கநாத், ஒரு காதல் காட்சியில் மகாகவி ஷேக்ஸ்பியர் சங்கீதத்தைப் பற்றிச் சொல்லியிருக்கும் சில வரிகளை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும். ரங்கநாத்தாக நடித்த ராமையாவுக்கு ஆங்கிலத்தில் பேச வரவில்லை. எனவே அந்த வசனத்தை லட்சுமியே பேச வேண்டியதாயிற்று. “மகாகவி ஷேக்ஸ்பியர் சொல்லுகிறார்”...என்று சொல்லத் தொடங்குவார் ராமையா. உடனே நான் இடைமறித்து, “ஒ, அதுவா? எனக்குத் தெரியுமே” என்று ஷேக்ஸ்பியரின் கவியைச் சொல்லி முடிப்பேன். ராமையா பேச வேண்டிய வசனத்தைத்தான் நான் பேசுகிறேன் என்று ரசிகர்கள் எளிதாகப் புரிந்து கொண்டார்கள். நாடக அரங்கேற்றத்தன்று, இந்த ஆங்கில வசனத்தை நான் பேசி முடித்து ராமையா மீண்டும் பேசத் தொடங்கியதும் ரசிகர்கள் கைதட்டி வரவேற்றார்கள்,

வரதட்சணையின் கொடுமை

இராஜேந்திரனாக எம். கே. ராதாவும், ருக்மணியாகச் சின்னண்ணா டி. கே. முத்துசாமியும் அற்புதமாக நடித்தார்கள். இராஜேந்திரனில் முக்கியமான கட்டம் இது: கோபாலாச் சாரியின் சூழ்ச்சியால் சிற்றன்னை ரங்கம்மாள், ருக்மணிக்கு மயக்க மருந்தைப் பாலில் கலந்து கொடுத்து விடுகிறாள். ஸ்ரீ ரங்க நாதரைத் தரிசித்து வரலாமென்று போக்குக் காட்டி ஆலயத்துக்கு அழைத்து வருகிறாள். வருகிற வழியில் ருக்மணிக்கு மயக்கம் வந்து விடுகிறது. உடனே அருகிலிருக்கும் கோபாலாச் சாரியின் வீட்டுக்குள் நுழைகிறார்கள். அங்கு ருக்மணியைப் படுக்க வைக்கிறார்கள். கோபாலாச்சாரியின் திட்டப்படி அங்கே காத்திருக்கிறான் இராஜேந்திரன். ருக்மணியைத் தனியே அறையில் கட்டிலில் கிடத்திவிட்டு ரங்கம்மாளும், கோபாலாச் சாரியும் மறைகிறார்கள். ருக்மணி மயக்கமாயிருக்கும் அந்நிலையில் இராஜேந்திரன் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறான். இளமையின் வெறி அடங்கியதும் அவன் உள்ளத்திலுள்ள நல்லுணர்வுகள் மேலெழும்புகின்றன. மனச்சாட்சி அவனைக் கண்டிக்கிறது. ஒழுக்கத்தை உயிரென மதிக்கும் அந்த இளம் பெண், உணர்வு பெற்றுத் தன் அலங்கோல நிலையைக் கண்டு தற்கொலை செய்து கொள்ளக் கூடாதே என்று எண்ணாகிறான்,