பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

177


அவளிடம் மன்னிப்புக் கேட்கத் துடிக்கின்றான். தற்கொலை செய்து கொள்ளக் கூடாதென்று அவளிடம் வாக்குறுதி பெற விரும்புகிறான். அவன் சிந்தனையில் மூழ்கித் தத்தளித்து நிற்கும் இந்த நேரத்தில், ருக்மணி கண்விழிக்கிறாள்; சுற்று முற்றும் பார்க்கிறாள்; சித்தி, தன்னை மோசம் செய்து விட்டதை உணர்ந்து ஆவேசம் கொள்ளுகிறாள்.

நடிப்புத் திறமைக்கே சவால்விடும் ஒர் அற்புதமான கட்டம் இது. இந்தக் காட்சியில் எம். கே. ராதாவும் சின்னண்ணாவும் அபாரமாக நடித்தார்கள். கற்பிழந்த அந்த நிலையில் நின்று, கதறி, அதனைச் சூறையாடிய அந்த இளைஞனைச் சபித்து, ஆவேசமாகப் பேசி, “ஐயோ, அம்மா, அப்பா” என்று அலறி ருக்மணி மூர்ச்சையடைகிறாள்.

சின்னண்ணா இந்தக் காட்சியில் மூர்ச்சித்து விழுந்ததும் சபையோர் மிகுந்த உணர்ச்சியுடன் பலமாகக் கைதட்டிப் பாராட்டினார்கள். காட்சியைப் பார்த்துக்கொண்டு, உள்ளே இருந்த எங்களுக்கெல்லாம் புல்லரித்துப் போய்விட்டது. காட்சி முடிந்ததும் வாத்தியார், சின்னண்ணா நடித்ததை அபாரமாகப் பாராட்டிப் புகழ்ந்தார்.

இராஜேந்திரனில் சிறந்த நகைச்சுவைப் பாத்திரம் கோபாலாச்சாரி. அந்தப் பாத்திரம் என். எஸ். கிருஷ்ணனுக்கே தரப்பெற்றது. என். எஸ். கே. அதைத் திறம்பெற நடித்து, வாத்தியாரின் பாராட்டைப் பெற்றார். தம்பி பகவதிக்கு, சீனிவாசன் வேடம் கொடுக்கப் பெற்றது. சீனிவாசன் ஒரு சின்ன வில்லன் பாத்திரம். அதில் பகவதிக்கு நல்லபேர். மிகச்சிறுவனாக இருந்ததால் அடிக்கடி ரசிகர்கள் கைதட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.

கே. கே. பெருமாள், துப்பறியும் கோவிந்தகை நடித்தார். இராஜேந்திரனுக்காக ஸ்ரீரங்கம் கோவில், காளிவிக்ரஹம் முதலிய சில புதிய காட்சிகளையும் தயாரித்தோம். கோவை, வெரைட்டி ஹாலில் இராஜேந்திரன் நாடகத்திற்கு அபாரமான வசூலாயிற்று. கொட்டகை உரிமையாளர் திரு. வின்சென்டை வாத்தியாரே நேரில் கண்டு, சினிமாவுக்கு உபயோகிக்கும் ‘ஆர்க்