பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

183


வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. பெங்களுரில் விரைவில் நாடகத்தை முடித்துக்கொண்டு திருப்பத்தூர் வந்துசேர்ந்தோம்.

பிரண்டுக்கு யோகம்

அப்போது கம்பெனியில் சிறு வேஷங்களைப் போட்டுக் கொண்டிருந்த பிரண்டு ராமசாமிக்கு யோகம் அடித்தது. பெருமாள் போட்டு வந்த துப்பறியும் கோவிந்தன் பாத்திரத்தை இராஜாம்பாள், இராஜேந்திரா ஆகிய இரு நாடகங்களிலும் அவர் ஏற்றார், தெளிவாகப் பேசித் திறம்பெற நடித்தார். அந்தக் காலத்தில் துப்பறியும் கோவிந்தன் ஒன்றுதான் பாட்டுகள் இல்லாத பாத்திரம். பிரண்டு ராமசாமிக்கு நன்றாகப் பாட வராது. துப்பறியும் கோவிந்தன் வேடத்தில் அவருக்கு அபாரமான பெயர் கிடைத்தது. இரத்தினாவளியில் எம்.கே. ராதா நடித்த வசந்தகன் வேடத்தையும் ராமசாமியே திறமையாக நடித்தார்.

எம். எம். சிதம்பராாதன் நாடகம்

திருப்பத்துாரில் நாங்கள் நடித்துக் கொண்டிருந்தபோது. அருகிலிருந்த கிருஷ்ணகிரியில் எம். எம். சிதம்பரநாதனின் அரிச்சந்திரா மயான காண்டம் நாடகம் நடந்தது. நாங்கள் பாவலர் கம்பெனியை விட்டுப் பிரிந்தபின் பாவலரிடம் பயிற்சி பெற்று முன்னுக்கு வத்தவர் சிதம்பரநாதன். அரிச்சந்திரா நாடகத்தில் அப்போது அவருக்கு நல்ல பெயர். அன்று எங்களுக்கு நாடகமில்லாததால் நானும் மற்றுஞ்சிலரும் கிருஷ்ணகிரிக்கு நாடகம் பார்க்கச் சென்றோம். அப்போது கிருஷ்ணகிரிக்குத் தனியாக ரயில் வண்டித் தொடர் இருந்தது. சின்ன ரயில் அது. இப்போது பொருட்காட்சிகளில் ஒடும் விளையாட்டு ரயில்போல இருக்கும். அதில் பயணம் செய்தது எங்களுக்கு மிகுந்த குதுரகலமாக இருந்தது. அரிச்சந்திரா நாடகத்தில் சிதம்பரநாதன் மிகுந்த சுறுசுறுப்பாகவும், அற்புதமாகவும் நடித்தார். சந்திரமதியாக நடித்தவரின் பெயர் நினைவில்லை. ஆனால், சின்னஞ்சிறுவகை நின்ற அரிச்சந்திரனுக்கு, சந்திரமதி தாய்போலத் தோற்றமளித்தார். சிதம்பரநாதனுக்கு அப்போது பதினன்கு வயதிருக்கலாம். சந்திரமதியாக நடித்தவர் முப்பது வயதுக்கு மேற்பட்ட அம்மை.