பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

185


முடிந்ததும் சிலதிருத்தங்களைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். மாமாவும், சிற்றப்பாவும் அவர் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றார்கள். அனுமதி அளிக்கவேண்டுமென்று கேட்டார்கள். அவரிடமிருந்து கிடைத்த பதில் சிறிதும் எதிர்பாராததாக, அதிர்ச்சி தருவதாக இருந்தது.

நாடகம் சரியில்லை; காட்சிகளின்அமைப்புச் சரியில்லை; நடிகர்களின் நடிப்புச் சரியில்லை; பாடங்கள் சரியில்லையென்று எல்லாவற்றையுமே குறை சொல்லிவிட்டு, “இவை யெல்லாவற்றையும் விரைவில் சரிபடுத்திக் கொண்டு எழுதுங்கள். மறுபடியும் வந்து ஒத்திகை பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்னைக்குப் புறப்பட்டுவிட்டார். அன்று, அவர்மீது எங்களுக்கு வந்த கோபம், இவ்வளவு அவ்வளவென்று சொல்ல முடியாது. என்ன செய்வது? அனுமதியில்லாததால் குறித்த தேதியில் நாடகம் நடைபெறவில்லை. மீண்டும் சந்திரகாந்தாவை நடத்தும் எண்ணத்தைக் கைவிட்டோம்.

ஒவியர் மாதவனின் உன்னதக் காட்சிகள்

சந்திரகாந்தாவுக்காக ஒவியர் மாதவன் எழுதிய காட்சிகள் எங்களைப் பார்த்துச் சிரித்தன. அவற்றில் திருக்கள்ளுர் பண்டார சந்நிதியின் அந்தப்புரம் ஒன்றை மிக அருமையாக சிருஷ்டித்திருந்தார். அதில் ஆறு கதவுகள் இருந்தன. அந்த ஆறு கதவுகளிலும் ஒரு ஆள் உயரத்தில் எழுதப் பெற்றிருந்த மடாதிபதியின் காதல் மனைவியரின் உருவங்கள் கண்ணையும், கருத்தையும் கவர்வனவாக அமைந்திருந்தன. ஆறு பேரும் ஆறு ஜாதிப் பெண்கள்; உயிருடன் நிற்பது போலவே பார்ப்பவருக்குத் தோன்றும். அந்த அற்புதக் காட்சியைக் காண்பிக்க முடியாமல் செய்துவிட்ட ஜே. ஆர். ரங்க ராஜுவை நானும், கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனும் சபித்துக் கொண்டே இருந்தோம்.

பெரியம்மை விளையாட்டு

இந்தச் சமயத்தில் கம்பெனியின் சில நடிகர்களுக்கு அம்மை நோய் வந்தது. அவர்களைத் தனியாக வைத்து, சிகிச்சை புரிவது சிரமமாக இருந்தது. எங்கள் தாயார் நிமோனியா ஜுரத்