பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

193


கலைவாணர் தமக்கையார் வீட்டில்

எட்டையபுரத்தில் என். எஸ். கிருஷ்ணனின் மூத்த சகோதரி இருந்து வந்தார். நாங்கள் சகோதரர்கள் நால்வரும்: கலைவாணருடனும், வாத்தியார் முதலியாருடனும் அவரது இல்லத்தில் உணவு புசிப்பது வழக்கம். வாத்தியாருடன் நான் அடிக்கடி சிறுபிள்ளைத்தனமாக ஏதாவது விளையாடிக் கொண்டிருப்பேன். ஒருநாள் நாங்கள் எல்லோரும் உணவு அருந்திக் கொண்டிருந்தபொழுது, வாத்தியாருக்குத் தாகம் எடுத்தது. அவர், எதிரிலிருந்த டம்ளரை எடுக்கக் கையை நீட்டினார். நான் உடனே விளையாட்டாக அவருக்குமுன் அந்த டம்ளரை எடுத்து, அதிலிருந்த தண்ணிரைக் குடித்துவிட்டு, வெறும் டம்ளரை வாத்தியார் முன்னால் வைத்தேன். எல்லோரும் சிரித்தார்கள். மீண்டும் டம்ளரில் ஜலம் ஊற்றப்பட்டது. வாத்தியார் கையை நீட்டினார். மறுபடியும் நான் டம்ளரிலுள்ள நீரை எடுத்துக் குடித்து விட்டேன். அவ்வளவுதான். வாத்தியார் விக்கி விக்கித் தவித்தார். அவரது கண்கள் மேலே செருகிப் போய்விட்டன. அப்படியே பின்னால் சாய்ந்தார். உடனடியாகத் , தண்ணிர் கொண்டுவரப்பட்டு, அவரது முகத்தில் தெளிக்கப்பட்டது. தண்ணீரைக் குடித்தார். பிறகு ஒருவாறாகச் சமாளித்து எழுந்து உட்கார்ந்தார். நான் திடுக்கிட்டுப் போய்விட்டேன். இப்படி நேருமென்று எதிர்பார்க்கவே இல்லை. எல்லோரும் என்னைக் கோபத்தோடு பார்த்தார்கள். பெரியண்ணாவின் கண்களைப் பார்க்கவே எனக்குப் பயமாக இருந்தது. “சிறுபிள்ளை விளையாட்டாகச் செய்துவிட்டான்” என்று வாத்தியாரே மற்றவர்களைச் சமாதானப் படுத்தியது, எனக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.

எட்டையபுரத்தில் அரண்மனைக்கு வெளியேயும் ஒரு பெரிய நாடகக் கொட்டகை இருந்தது. இரத்தினவளி நாடகம் அங்கும் நடிக்கப்பெற்றது. ஆக, ஒரே ஒரு நாடகத்திற்காக எட்டையபுரம் சென்ற நாங்கள், அரண்மனையின் உள்ளிலும், வெளியிலுமாக மொத்தம் பதினைந்து நாடகங்கள் நடிக்க நேர்ந்தது. மதுரைக்குத் திரும்பியதும் விரைவில் பட்டாபிஷேகத்தை