பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196


அண்ணாவும் அதை யாரிடமும் சொல்லவிரும்பவில்லை. திருவனந்தபுரத்தை விட்டுப் புறப்பட்டபோது, அப்போது முக்கிய பெண் வேடதாரியாக இருந்த செல்லம், கம்பெனியோடு வர மறுத்து விட்டான். அவனை மாமா மிகவும் அபிமானத்தோடு நடத்தி வந்ததால், மாமா இல்லாமல் அவன் வர விரும்பவில்லை. மாமாவே செல்லத்தைப் போக வேண்டாமென்று சொல்லி நிறுத்தி விட்டதாகவும் கேள்விப்பட்டேன். பணம் சம்பந்தமாகவும் மாமா எங்களுக்குப் பெரிய மோசடி செய்துவிட்டதாக அம்மா கூறினார்கள். எனவே, மேற்கொண்டு நான் எதுவும் கேட்க விரும்பவில்லை.

காவடிக் கட்டு

திருவனந்தபுரம் புத்தன் சந்தையிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் எனக்குக் காவடி எடுக்கும் நேர்த்திக் கடன் இருந்தது. அம்மா எப்போதோ நேர்ந்திருந்தார்கள். இதற்கு முன் திருவனந்தபுரம் சென்றபோதெல்லாம் இக்கடனைத் தீர்க்கச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. இம்முறை அதை நிறைவேற்ற முடிவு செய்தார்கள். காவடியைத் தூக்கித் தோளில் வைத்ததும் சுவாமி வரும்; தன் நினைவே இராது என்று நான் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தேன். நான் கடவுள் நம்பிக்கை உடையவன். என்றாலும் இதில் எனக்கு நம்பிக்கையில்லை. நேர்வுக் கடன் தீர்க்கும் தினத்தன்று காலை நீராடிக் காவியுடை கட்டி, பூஜைக்கு ஆயத்தமானேன். செண்டை, முரசு, நாதசுரம், தவுல் போன்ற மேளதாளச் சத்தங்கள் என் செவிகளைத் துளைக்கத் தொடங்கின. காவடி எடுத்துத் தோளில் வைத்ததும், என் முன்னே இசைக்கருவிகளை உச்ச ஸ்தாயையில் முழக்கி, ஆட்டம் போடலாயினார். அவ்வளவுதான். தலை சுற்றுவது போன்ற நிலை; என் உணர்வில் ஒரு எழுச்சி. நினைவை இழந்தேன். மீண்டும் எனக்கு நினைவு வந்தபோது, சுப்பிரமணிய சுவாமி கோவிலின் முன் காவடியோடு நின்று கொண்டிருந்தேன். ஏறத்தாழ ஒரு மைல் தொலைவிலுள்ள கோவிலுக்கு எப்படி வந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. இந்த அனுபவம் எனக்குப் புதுமையாக இருந்தது.