பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

201


என்.எஸ்.கே. பேசவேண்டும், அவரோ பேச முடியாமல் “ஸ்வாமி, தங்கள் தங்கள்..."என்று தவித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் “திரை விடுங்கள், திரை விடுங்கள்” என்ற பல குரல்கள்! திரைவிடப் பட்டது. விமானம் கீழே இறக்கப் பட்ட பிறகுதான் எனக்கு உண்மை விளங்கியது.

விமானம் காலவரைக் கடந்து செல்லும் போது அந்த அட்டை விமானத்தில் நீண்டு கொண்டிருந்த ஒரு ஆணி,நிஷ்டை யிலிருந்த முனிவரின் நீளக் கொண்டையோடு கூடிய சடைமுடி டோப்பாவையும் பூப்போல எடுத்துக் கொண்டு போய் விட்டது. விமானம் மறைந்ததும், நிஷ்டை கலைந்த காலவர் மொட்டைத் தலையில் உச்சிக் குடுமியோடு சபைக்குக் காட்சியளித்தார். உணர்ச்சியோடு வீற்றிருந்த அவருக்குக் கொண்டை பறிபோனதுகூடத் தெரியவில்லை. இந்த நிலையில் முனிபுங்கவரைப் பார்த்த சிஷ்யர்களால் எப்படி வாய் திறந்து பேச முடியும்?... ரசிகர்களால்தான் எப்படிச் சிரிப்பை அடக்க முடியும்?

நாடகங்களுக்கு வருவாய் குறைவாக இருந்தாலும், இவ்வாறு மேடையில் நிகழும் சுவையான நிகழ்ச்சிகள் எங்கள் கவலைக்கு மருந்தாக அமைந்தன. பொள்ளாச்சி முடிந்து ஈரோடு வந்தோம்.