பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

205


சுமார் இரண்டாயிரம் பேர் தாராளமாக உட்காரக்கூடிய நாடக அரங்கம். தரை இல்லை. அதற்குப் பதிலாக ஏறக்குறைய ஆயிரம் பேர் வசதியாக உட்காரக் கூடிய முறையில் காலரி அமைத்திருத்தது. 5, 4, 3, 2, 1 எனக் கட்டணம் வைத்து, ஐந்து வகுப்புகள் பிரித்திருந்தார்கள். இந்தக் கட்டணம் நாங்கள் தமிழ்நாட்டில்: அந்த நாளில் கேள்விப்படாத கட்டணம். நாடகக் கொட்டகை இருந்த இடம் ஒரு பெரிய சுற்று வட்டகைக்குள் காலனிபோல் தனியிடமாக இருந்தது. கொட்டகை இருந்த வட்டகைக் குள்ளேயே சுமார் பத்து வீடுகளுக்கு மேலிருந்தன. முதல் வீடு எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது. அந்த வீட்டில் குடியேறினோம். அடிக்கடி நாடகங்களை ஒத்திகைப் பார்க்கவும், பகல் நேரங்களில் விளையாடவும் கொட்டகை எங்களுக்கு வசதியாக இருந்தது. தம்பி பகவதி, கே. ஆர். ராமசாமி, பிரண்ட் ராமசாமி, சகஸ்ரநாமம் இவர்களையெல்லாம் சாப்பாட்டு நேரம் தவிர மற்ற நேரங்களில், கொட்டகையில்தான் பார்க்கலாம். நாடகமேடையில் முழுதும் பலகை போட்டு, அடியில் ஒரு ஆள் உயரம் வசதியாக இடமிருந்ததால் வெயில் படாது ஓடிவிளையாடுவதற்கு செளகரியமாக இருந்தது. காலரி போட்டிருந்த இடத்திலும் அதே போன்று வசதியிருந்தது. இவ்விரு இடங்களையும் நாங்கள் விளையாடுவதற்காகப் பயன்படுத்திக் கொண்டோம். பகல் நேரம் முழுதும் அங்குதானிருப்போம்.

பெருங் கலகம்

நாடகம் தொடங்கியது. நல்ல வசூலாயிற்று. வைத்தியர் சண்முகம்பிள்ளை ஒரே உற்சாகமாக இருந்தார். நாற்காலி,பெஞ்சி, காலரிக்குரிய வாயில்களில் நிற்பதற்காக நாலைந்து பேரை நிரந்தரமாக வைத்திருந்தார். அவர்களில் மூக்குப்பரி என்பவர் ஒருவர். நல்ல ஆஜானுபாகுவான ஆசாமி. பார்ப்பதற்கே பயமாக இருக்கும். ஏறத்தாழ எட்டடி உயரமிருப்பார். அவர் எப்போதும் கொட்டகையில்தான் படுத்துக் கொள்வது வழக்கம். பிற்பகல் நேரங்களில் மூக்குப்பரி குடித்துவிட்டுவந்து அட்டகாசம் செய்வார். இரவு நாடகமாதலால், பகல் உணவுக்குப்பின் எல்லோரும் உறங்குவார்கள். இவர் யாரையும் உறங்கவிடாமல்