பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

207


கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது. சிற்றப்பாவையும், முதலில் தன்னை அடித்து வீழ்த்திய கோபால் பிள்ளையையும் கொன்று விடுவதாக மூக்குப்பரி சபதம் செய்திருப்பதாக அறிந்தோம். இரவு நேரங்களில் உறக்கமே வருவதில்லை. எந்த நேரத்திலும் என்ன நடக்குமோவென்று அச்சமாயிருந்தது.

நீதி மன்றத்தில்

கண்ட்ராக்டர் சண்முகம் பிள்ளை எதுவும் நேராதென்று எங்களுக்கெல்லாம் தைரியம் கூறினார். இந்தக் கலகத்தால் யாரும் வெளியே போகவோ, எதையும் பார்க்கவோ இயலாமல் மிகுந்த கஷ்டப்பட்டோம். எங்களுக்கும், மூக்குப்பரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. சிற்றப்பா நீதிமன்றத்திற்குப் போகும்போது அவருக்குப் பாதுகாப்பாக இரு போலீஸ்காரர்களும், கொழும்பிலே இருந்த வேறு சில தமிழ் வீரர்களும் உதவினார்கள், மூக்குப் பரியும் அவரது ஆட்கள் சிலரும் எந்நேரமும் கொட்டகையின் வெளி வாயிலருகே ஒரு கட்டையில்தான் உட்கார்ந்திருப்பார்கள். அவர்கள் நிலையையும் உறுதியையும் கண்ட பெரியண்ணா, எந்தக் காரணத்தைக்கொண்டும் யாரும் வெளியே போகக்கூடாதென்று உத்தரவு போட்டு விட்டார். எல்லோரும் இறுதிவரை கொட்டகையிலேயே அடைபட்டுக் கிடந்தார்கள். நீதிமன்றத்தில் வழக்கு சமரசமாய்ப் போகச் சண்முகம்பிள்ளை ஏற்பாடு செய்தார். சிற்றப்பாவையும் மூக்குப்பரியையும் இணைத்து வைத்தார். மூக்குப்பரிக்குத் தன்னை முதலில் அடித்த ஒருவரை மட்டுந்தான் நன்றாகத் தெரியும். அவரை மாத்திரம் எப்படியாவது தீர்த்துக் கட்டி விடுவதென்று முடிவு செய்து கொண்டார்.

நாங்கள் செய்த தந்திரம்

மூக்குப்பரிக்குத் தெரியாமல் கோபால்பிள்ளையைத் தமிழ் நாட்டுக்கு அனுப்பிவிடப் பெரியண்ணா ஏற்பாடுகள் செய்தார். கோபால்பிள்ளை நல்ல வீர உள்ளம் படைத்தவர். எனவே, அவர் இவ்வாறு கோழைத்தனமாக ஓடிப்போகச் சம்மதிக்க வில்லை. என்றாலும், குழுவின் பொது நன்மையைக் கருதிப்