பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

211


கலைவாணர் ஊடல்

கரூரில் மீண்டும் நாடகங்கள் தொடங்கின. என். எஸ். கிருஷ்ணனுக்கும் சிற்றப்பாவுக்கும். ஏதோ சிறு தகராறு ஏற்பட்டது. கிருஷ்ணனுக்குப் பெரியண்ணா அதிகமாகச் சலுகை கொடுத்து விட்டதாகவும், அதனால் தன்னை அவன் மதிப்பதில்லை யென்றும் சிற்றப்பா புகார் செய்தார். பெரியண்ணா என். எஸ். கிருஷ்ணனைக் கூப்பிட்டுக்கேட்டார். அவருடைய பதில் திருப்தி யளிக்கவில்லை. எனவே, உடனடியாகக் கணக்குத் தீர்த்து, அவரைக் கம்பெனியிலிருந்து நிறுத்தி விட்டார்.

எங்களுக்கு நிரம்பவும் கவலையாயிருந்தது. கலைவாணர் கம்பெனியின் முக்கிய நடிகராக மட்டும் இல்லை. எங்கள் எல்லோருடைய உள்ளங்களையும். கவர்ந்திருந்தார். மீண்டும் அவரைக் கம்பெனியில் சேர்த்துக்கொள்ளச் சின்னண்ணா எவ்வளவோ முயன்றார். பயனளிக்கவில்லை. கலைவாணரும் உடனே ஊருக்குப் போகவில்லை. அவருக்குக் கம்பெனியை விட்டுப் போக மனமுமில்லை. கம்பெனி வீட்டு அருகிலேயே ஒரு தனி அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, அடிக்கடி எங்கள் கண்ணில் படும்படியாகப் போவதும் வருவதுமாக இருந்தார். ஒரு நாள் “கள்வர் தலைவன்” நாடகம் நடைபெற்றது. அதற்கு டிக்கட் எடுத்துக் கொண்டு முன்வரிசையில் வந்து உட்கார்ந்து நாடகம்பார்த்தார். அவர், நாடகத்தில் ‘வயத்தான்’ என்ற பாத்திரத்தை ஏற்று, மிகச் சிறப்பாக நடிப்பார். அந்தப் பாத்திரத்தை அன்று, மற்றொரு நகைச்சுவை நடிகராகிய சுந்தரமையர் போட்டிருந்தார். ஒருவருக்கும் நாடகத்தில் மனம் செல்லவில்லை. என்.எஸ். கிருஷ்ணனையே பார்த்துக் கொண்டு நடித்தார்கள். பல நடிகர்கள் பகல் நேரங்களில் அவருடைய தனியறைக்குப் போய்ப் பேசிக் கொண்டிருப்பது வழக்கமாகி விட்டது. என். எஸ். கிருஷ்ணன் விலகியதும் தன் தந்தைக்குக்கடிதம் எழுதியிருப்பார்போல் தெரிகிறது. நாலந்து நாட்களில் அவரது தந்தையார் சுடலைமுத்துப் பிள்ளை நாகர்கோவிலில் இருந்து வந்து சேர்ந்தார். சிற்றப்பாவுடன் கலந்து பேசினார். இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்ததால்