பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212


ஒன்றாகவே போய்க் குடித்துவிட்டு வந்தார்கள். குடியினால் ஏற்படும் நட்பு மிகவும் வலிமையானது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அது முற்றிலும் உண்மை. பிறகு சிற்றப்பாவே வந்து கிருஷ்ணனை மீண்டும் கம்பெனியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று பெரியண்ணாவிடம் சிபாரிசு செய்தார். சுமார் பதினைந்து நாட்கள் கம்பெனியோடு கலைவாணருக்கிருந்து வந்த ஊடல் நீங்கியது. மீண்டும் கம்பெனியில் சேர்த்துக்கொள்ளப் பெற்றார்.

கலைவாணரின் ஆற்றல்

அந்த நாளிலேயே என். எஸ். கிருஷ்ணனுக்கு அபாரமான திறமை இருந்தது. ஆர்மோனியம் வாசிப்பார். மிருதங்கம் வாசிப்பார்; ஒவியம் வரைவார். ஒவியர் கே. மாதவனிடம் அவருக்கு நெருங்கிய நட்புறவு இருந்தது. மாதவன் அவர்கள், என். எஸ். கிருஷ்ணனின் ஓவியக் கலை உணர்ச்சியை வளர்ப்பதில் பெரும் பங்கு கொண்டார். மாதவனும் மிருதங்கம் வாசிக்கக் கூடியவர்; இராகங்களை அற்புதமாகப் பாடுவார். கே. ஆர். ராமசாமிக்கு, மாதவன் அடிக்கடி இசைப்பயிற்சி அளிப்பதுண்டு.

ஒருநாள், நாடகத்தில் மிருதங்கம் வாசிப்பவருக்கு உடல் நலம் கெட்டுவிட்டது. வேறு யாரும் கிடைக்கவில்லை. அந்த நெருக்கடியில், அன்று என். எஸ். கிருஷ்ணன்தான் மிருதங்கம் வாசித்து, நாடகத்தைச் சிறப்பாக நடத்தினார். இதே போன்று சில நாடகங்களுக்கு என். எஸ். கிருஷ்ணன் ஆர்மோனியம் வாசிக்கவேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்பட்டதுண்டு. ஒவியர் மாதவன் இல்லாத நேரங்களில் காட்சிகளும் வரைந்து கொடுத்திருக்கிறார். பொதுவாகக் கலைவாணர் கிருஷ்ணன் ஒரு சகல கலா வல்லவராகவே விளங்கி வந்தார். அவரைப் பற்றிய அபூர்வமான குறிப்புகள் மேலும் தொடருமாதலால் இப்போது இவ்வளவோடு விட்டுவிட்டு மேலே செல்லுகிறேன்.

கே. பி. சுந்தராம்பாள் அம்மையார்

கரூரிலிருந்தபோது எங்களுக்கும் திருமதி கே. பி. சுந்தராம்பாள் அம்மையாருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். பவளக்கொடி நாடகத்தில்