பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214


தயாரித்தோம். கல்லிடைக்குறிச்சியில் மேனகா அரங்கேறியது. கே. ஆர். ராமசாமி மேனகா பாத்திரத்தை மிக அற்புதமாக. நடித்தார். அருமையாகப் பாடினார். மாயூரம் வேதகாயகனாரின் ‘நாயகர் பட்சமடி எனக்கது ஆயிரம் லட்சமடி’ என்ற பாடலை அவர் பிலஹரி இராகத்தில் பாடியது, இன்னும் பசுமையாக என் நினைவில் இருக்கிறது. பகவதிக்கும், ராமசாமிக்கும் கணவன் மனைவி இணைப் பொருத்தம் பிரமாதமாக இருந்தது. இந்த இணைப்புப் பொருத்தத்தைப் பார்த்து, மேலும் பல நாடகங்களில் கணவன் மனைவி பாத்திரங்கள் இவர்களுக்கே அளிக்கப்பட்டன. மேனகாவுக்கு நல்ல பேரும், புகழும் கிடைத்தன. மேனகா அரங் கேறியபின், நாங்கள் நடித்த எல்லா நாடகங்களிலும் இதுவே முதன்மையாக நின்றது.

கல்லிடைக்குறிச்சி எழில் மிக்க சிற்றுார். வாய்க்காலிலும், தாமிரபரணி ஆற்றிலும் நிறையத் தண்ணிர் ஓடிக்கொண் டிருந்தது. எல்லோரும் காலையில் ஆற்றில் குதித்து விளையாடிக் குளித்து விட்டுத்தான் வீடு திரும்புவோம். கல்லிடைக்குறிச்சி டாக்டர் சங்கரய்யரும், அவரது மனைவி லட்சுமியம்மாளும் பிரபல மாணவர்கள். தேசீய இயக்கத்தில் ஈடுபட்டவர்கள். அவர்கள் எங்கள் நடிகர்களிடம் மிகுந்த அன்பு காட்டினார்கள். நாடகக் கொட்டகைக்கு அருகிலேயே அவர்கள் வீடும் இருந்தது. எங் களுக்கு ஏதாவது தலைவலி,காய்ச்சல்என்றால் உடனே சங்கரய்யர் வீட்டுக்குப் போவோம். அவர்கள் வீடு, எங்கள் சொந்த வீடு மாதிரி, அந்த அளவுக்கு நெருங்கிப் பழகினோம்.

மேனகா நாடகம் பல வகையில் எங்களுக்குத் தொல்லை கொடுத்தது. முஸ்லீம்கள் அதிகமாக இருக்கும் ஊரில் “இந்துப் பெண்ணை ஒரு முஸ்லீமுக்கு விற்பதா?” என்று கூறி, இந்துக்கள் நாடகத்தை எதிர்ப்பார்கள். ஜாதி இந்துக்கள் அதிகமாக இருக்கும் ஊரில், “ஒரு முஸ்லீமை அயோக்கியணாகக் காட்டுவதா?” என்று கூறி, முஸ்லீம்கள் நாடகத்தை எதிர்ப்பார்கள். இப்படியே பல ஊர்களில் எங்களுக்குச் சிரமம் ஏற்பட்டு வந்தது. ஆனால், எல்லா ஊர்களிலும் நடுநிலையோடு நாடகம் பார்க்கும் ரசிகர்களும் இருப்பார்களல்லவா? அவர்களின் துணையோடு இந்த எதிர்ப்புக்களை யெல்லாம் சமாளித்து வந்தோம்.