பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

237

கூட்டத்தில் வேங்கடகிருஷ்ணபிள்ளை கைது செய்யப்பட்டார். பிரம்மாண்டமான கூட்டத்தைப்போலீசார் தடியடி கொடுத்துக் கலைத்தார்கள். சில அடிகள் சின்னண்ணாவுக்கும் கலைவாணருக்கும் கிடைத்தன. வீட்டுக்கு வந்து அவர்கள் இச்செய்தியை அறிவித்த, போது என்னால் தாங்க முடியவில்லை. உணர்ச்சி விவரிக்க இயலாததாக இருந்தது. என்னை ஈன்ற தாய்நாட்டிற்கு என்னால் இயன்ற பணியைச் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் மேலெழுந்தது. ஒரு முடிவுக்கு வந்தேன். மறுநாள் என்னுடைய மேனியைப் புனிதமான கதராடை அழகு செய்தது.

நாற்பத்தொரு ஆண்டுகள் கடந்தன. அன்று முதல் இன்று வரை நான் தொடர்ந்து கதராடைதான் உடுத்தி வருகிறேன். தொடக்கத்தில் சாக்கு, சமுக்காளம் இவற்றை உடுத்துவது போன்ற சிறு உணர்வு தோன்றியதுண்டு. ஆனால் உள்ளத்தில் அலைமோதிக் கொண்டிருந்த தேசிய உணர்ச்சிக்குமுன் இந்த மென்மை உணர்வுகளெல்லாம் பறந்தோடிவிட்டன. எங்கள் நாடகக் குழுவின் நெருக்கடியான காலங்களில் அதிகப் பணம் கொடுத்து உடைகள் வாங்குவதற்கும் இயலாதிருந்த எத்தனையோ சந்தர்ப்பங்களில் கதரே உடுத்துவது என்ற இலட்சியத்தை நிறைவேற்ற நான் பட்ட கஷ்டங்களெல்லாம் இப்போது நினைவுக்கு வருகின்றன.

வாத்தியார் மீண்டும் விலகினார்

தஞ்சையிலிருந்து ஒருவகையாகத் தட்டுத் தடுமாறி மதுரைக்கு வந்து சேர்ந்தோம். பழைய நாடகங்களுக்கு வசூல் இல்லாததால் புதிய நாடகம் தயார் செய்யும்படி வாத்தியார் முதலியாரிடம் பெரியண்ணா வற்புறுத்தினார். ‘சுந்தர திரன்’ என்னும் ஒரு நாவல் நாடகம் பாடம் கொடுக்கப் பெற்றது. இரண்டொரு நாட்கள் ஒத்திகையும் நடைபெற்றது. அதற்குள் வாத்தியாரோடு சம்பளத் தகராறு ஏற்பட்டுவிட்டது. அதிகச் சம்பளம் கொடுத்தால்தான் இரவு நாடகத்திற்கு வரமுடியு மென்று வாத்தியார் கண்டிப்பாகக் கடிதம் எழுதியனுப்பி விட்டார். இந்தக் கடிதத்தைக் கண்டதும் கலைவாணர் என். எஸ்.