பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தேசபக்தி

எங்களுக்கெல்லாம் புதிய நாடகம் தயாரிக்க வேண்டு மென்ற ஒரே ஆவல். அப்போது மதுரகவி பாஸ்கரதாஸ் மதுரையில் ஒரு சிறந்த நாடகாசிரியராக இருந்தார். அந்த நாளில் அவருடைய பாடல்களைப் பாடாத ஸ்பெஷல் நடிகர்களே இல்லை யென்று சொல்லலாம். பாஸ்கரதாஸ் ஒரு தேசீயவாதி. இந்தியத் தேசீயத் தலைவர்களின் பேரிலெல்லாம் ஏராளமான பாடல்கள் புனைந்திருக்கிறார், பிச்சையெடுக்கும் சிறுவர்கள்கூடப் பாஸ்கர தாசின் தேசீயப் பாடல்களைப்பாடுவதை நான் கேட்டிருக்கிறேன். சொற்சுவையும், பொருட்சுவையும் நிறைந்து காலத்தோடு ஒத்திருந்த அவரது பாடல்கள் மிகப் பிரசித்தி பெற்று விளங்கின. பாஸ்கரதாஸ் எங்களுக்கு அறிமுகமானார். வெ. சாமிநாத சர்மா எழுதிய பாணபுரத்துவீசன் என்னும் ஒரு நாடகத்தின் அச்சுப் பிரதியை அவர் கொண்டு வந்தார். அதைப் படித்துப் பார்த்தோம். அப்போதிருந்த எங்கள் தேசீய உணர்ச்சிக்கு அந்த நாடகம் நிரம்பவும் பிடித்தது இடையிடையே சில புதியகாட்சிகளைச் சேர்த்து அவரே எழுதிக் கொடுத்தார். அப்போது பாண புரத்துவீரன் நாடகம் சர்க்காரால் தடை செய்யப்பட்டிருந்தது. எனவே அந்நாடகத்திற்குத் தேசபக்தி என்றுபெயர் வைத்தோம்.

தேசபக்தி

நாடகம் வேகமாகத் தயாராயிற்று. பாஸ்கரதாஸ் உணர்ச்சி மிகுந்த பாடல்களை இயற்றித் தந்தார். அத்தோடு மகாகவி பாரதியின் ‘என்று தணியுமிந்த சுதந்திர தாகம்’ ‘விடுதலை விடுதலை,’ ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ முதலிய பாடல்களையும் இடையிடையே சேர்த்துக் கொண்டோம். தேசபக்தி நாடகத்தில்தான் முதன் முதலாகப் பாரதியின்