பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240


பாடல்கள் பாடப் பெற்றன. அந்த நாடகத்தில் புதுமையாக ஏதாவது செய்ய வேண்டுமென்று சின்னண்ணாவும், கலைவாணரும் யோசித்தார்கள். மகாத்மா காந்தியடிகளைப் பற்றிய வரலாற்றுப் புத்தகம் ஒன்று வாங்கி வந்தார்கள், காந்தி மகான் கதையை வில்லுப்பாட்டாகப் பாடலாமென முடிவு செய்யப்பட்டது. காந்தியடிகளின் பிறப்பு முதல் அவர் வட்டமேஜை மாநாட் டுக்குப் புறப்பட்டது வரை வில்லுப்பாட்டாக அமைக்கப்பட்டது. ஒரு நாள் இரவு உணவுக்கு மேல் நானும் கலைவாணரும் உட்கார்ந்து பாடல்களை எழுதி முடித்தோம். மறுநாள் ஒத்திகை ஆரம்பமாயிற்று. தயாரிப்பு வேலைகள் சுறுசுறுப்பாக நடந்தன. தேசீய வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் புனிதமான கதரிலேயே உடைகள் தைக்கப்பட்டன. வாத்தியார் கம்பெனியை விட்டு விலகிய பதினேழாவது நாள் அவசர அவசரமாகத் தேசபக்தி அரங்கேறியது.

உணர்ச்சி வேகம்

1931 மே 19 ஆம் நாள். ஆம்; அன்றுதான் தேசபக்தி அரங்கேற்றம். அன்று எங்களுக்கு ஏற்பட்டிருந்த உணர்ச்சியை விவரிக்க இயலாது. ஏதோ ஒர் உணர்ச்சியும் எழுச்சியும் எல்லோருக் கும் இருந்தது. நாடெங்கும் கொந்தளிப்பு! விடுதலையுணர்ச்சி கொழுந்து விட்டு எரிந்த காலம்! பாரத வீரன் பகவத் சிங்கும் அவரது தோழர்கள் சுகதேவ், ராஜகுரு ஆகியோரும் தூக்கிலிடப்பட்டுச் சில நாட்களே ஆகியிருந்தன. அந்த நெஞ்சுருக்கும் செய்திகள் நாட்டு மக்கள் உள்ளத்தில் பெரும் ஆவேசத்தை ஊட்டியிருந்தன. நாட்டின் சூழ்நிலை, நடிகர்களாகிய எங்கள் உள்ளத்தை மட்டும் பாதிக்காதா, என்ன! நாங்களும் உணர்ச்சியில் திளைத்து நின்றோம்.

நாடகம் தொடங்கியது. முதற் காட்சி பொதுக்கூட்டம்.

தேச பக்தியே முக்தியாம்
தெய்வ சக்தியாம்

என்ற பாடலை நான் முதலில் பாடியதும் சபையோர் உணர்ச்சி வசப்பட்டு, மகாத்மா காந்திக்கு ஜே!” என்று கோஷமிட்டனார். பாட்டு முடிந்ததும் பாணபுரத்தின் தலைவர், வாலீசனாக நடித்தவர்