பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

249


எதிர்பாராதபடி அந்தச் சமயம் மற்றொரு கொட்டகையில் புளிய மாநகர் பாய்ஸ் கம்பெனி நாடகம் நடத்தி வந்தது. அதில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்த பி. எஸ். கோவிந்தனுக்கு அபாரமான பேர். அவர்களுடைய நாடகங்களுக்கு நல்ல வசூலும் ஆயிற்று. புளியமாநகர் பாய்ஸ் கம்பெனியில் சிறந்த நடிகர்கள் இருந்தார்கள். பாய்ஸ் கம்பெனி என்ற பெயருக்கொப்ப எல்லோரும் சிறுவர்களாகவும் இருந்தார்கள். எங்கள் கம்பெனியின் பழைய நடிகர் கல்யாண வீரபத்திரன் தான், அங்கு வாத்தியாராக இருந்தார். அவர் தயாரித்த சுவாமிகளின் அபிமன்யு சுந்தரி நாடகத்தை நாங்களும் பார்த்தோம். பி. எஸ். கோவிந்தன் வீர அபிமன்யுவாக நானே வியக்கும் முறையில் நடித்தார். கடோற் கஜனக நடித்த காளீஸ்வரன், சுந்தரியாக நடித்த மயில்வாகனன் ஆகியோரும் மிக அருமையாக நடித்தார்கள். புதிய காட்சிகளைத் தயாரித்து ஸ்ரீகிருஷ்ணலீலாவை அமோகமாக நடத்தியும் எங்களுக்கு வசூல் இல்லை. விரைவில் நாடகத்தை முடித்துக் கொண்டு திருமயத்திற்குப் பயணமானோம்.

நாகர்கோவிலில் குடும்பம் நிலைத்தது

இந்தச் சமயங்களிலெல்லாம் சிற்றப்பாவின் குடும்பம் மதுரையிலேயே இருந்து வந்தது. இறுதியாகப் பெரியண்ணா ஒரு முடிவுக்கு வந்து, சிற்றப்பா, அவர் மனைவி, தங்கைமார்கள், பெரியண்ணாவின் மனைவி எல்லோரையும் நாகர்கோவிலில் ஒருவீடு பார்த்து, அங்கேயே நிரந்தரமாகத் தங்கச் செய்து விட்டு, திருமயம் திரும்பினார்.திருமயத்திலும் வசூல் இல்லை. எங்கள் பெரிய தகப்பனார் மகன் டி. எஸ். திரவியம் பிள்ளை நாகர்கோவிலில் இருந்தார். கம்பெனியின் நிருவாக வேலைகளைக் கவனிப்பதற்கு ஒருவர் தேவைப் பட்டது. அந்த வேலையைத் திரவியம்பிள்ளை அவர்களுக்குக் கொடுக்க எண்ணி, அவரையும் அழைத்து வந்தார் பெரியண்ணா. சில மாத காலம் திரவியம் பிள்ளையின் மேற்பார்வையில் கம்பெனி நடைபெற்றது. அவருடைய போக்கு, கம்பெனியிலிருந்த நடிகர்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. என்றாலும் அதை வெளியே சொல்ல அஞ்சி, எல்லோரும் பேசாதிருந்தார்கள். இந்த நிலையில் கம்பெனி திண்டுக்கல் சென்றது.