பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

251


அரங்கேறியது. ராமதாஸ், என். எஸ். கிருஷ்ணனுடைய முழுத் திறமையையும் வெளிப்படுத்தும் நாடகமாக அமைத்தது. திண்டுக்கல் முடிந்ததும் கம்பெனி திருச்சி, தஞ்சை முதலிய நகரங்களுக்குச் சென்றது.

எந்த ஊரிலும் வசூல் இல்லை. மிகவும் கஷ்டப்பட்டுக் கம்பெனியை நடத்தி வந்தோம். இந்தச் சமயத்தில் பேசும் படங்கள் தமிழ் நாட்டில் வேகமாக வரத் தொடங்கின. ஏதேதோ கனவுகள் கண்டு கொண்டிருந்த எங்களுக்குப் பேசும் படங்களின் வருகை இடி விழுந்தது போலிருந்தது. படமல்லவா பேசுகிறது?... மனிதர்கள் பேசுவதை யார் கேட்பார்கள்?

பேசும் படப் போட்டி

ஆகாசவாணி பேசுவதாகவும், அசரீரி ஒலமிடுவதாகவும், பதுமைகள் வாய் திறந்து பாடுவதாகவும் பழங் கதைகளில் படித்திருந்த மக்கள், படம் பேசுகிறது என்றவுடன் திருவிழாவுக்குப் போவதைப்போல் சாரி சாரியாகப் போகத் தொடங்கினார்கள். புதிதாக வந்த நிழல் மனிதனுடன், உயிர் மனிதன் போட்டியிட இயலவில்லை. கம்பெனி கடிய வேகத்தில் பள்ளத்தை நோக்கிப் பாய்ந்தது. டி. பி. ராஜலட்சுமி நடித்த வள்ளி திருமணம் படம் அமோகமாக ஓடியது. ஜனங்கள் வெறிபிடித்தவர்களைப் போலத் திரைப்படக் கொட்டகையில் போய் விழுந்தார்கள். திரைப்படங்களில் அப்போது பாடல்களுக்குத்தான் முதலிடம் கொடுக்கப் பெற்றிருந்தது. எனவே சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றிருந்த நடிகர்களுக்கு அதிக மதிப்பு இருந்தது. நாடகத்திலேயே பாடல்களைக் குறைத்துக் கொண்டு நாங்கள் சமுதாய நாடகங்களை நடத்தி வந்தோம். எங்கள் நாடகங்களில் நடிப்புக்குத்தான் முதலிடம். எனவே எங்களால் பொதுமக்களைக் கவர முடியவில்லை.

சுந்தரராவ்

தஞ்சையில் நாடகங்கள் நடந்துகொண்டிருந்தபோது, அங்குள்ள அமைச்சூர் சபைகளுடன் எங்களுக்குத் தொடர்பு ஏற்பட்டது. அந்நாளில் சென்னைக்கு அடுத்தபடியாகத் தஞ்சையில் தான் அதிகமான அமைச்சூர் சபைகள் இருந்தன. சுதர்சன சபா மிகப் பழைய அமைச்சூர் குழு. இதைத் தவிர விஜய விலாச சபா.