பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

259


அதையும் பேசி முடித்தேன். எமனாக நின்ற நாயர் அதன் பிறகும் கோபம் கொள்ளவில்லை. “என்ன நாரதரே! அரியும், அயனும் காண்பதற்கு அரிதான எம்பெருமான் திருவடி என் மீது பட்டதையா அவமானம் என்று சொல்கிறீர்? ஆஹா, அதற்கு நான் என்ன பாக்கியம் செய்திருக்க வேண்டும்?” என்று மேலும் சிரித்துக்கொண்டே பேசினார். எனக்கு எதுவும் தோன்றவில்லை. எமன் கோபப்பட்டாலல்லவா நாரதரும் கோபத்தோடு சபதம் செய்ய முடியும்? சிரித்துப் பேசும் எமனிடம் எப்படிக் கோபம் கொள்வது? திணறினேன்; ஏதேதோ குளறினேன். கடைசியாக என்னுடைய பரிதாப நிலைக்கு இரங்கி நாயர் கோபம் கொள்வது போல் நடித்த பிறகுதான் நாடகம் நகர்ந்தது. நானும் பாட்டுப் பாடிச்சபதம் செய்துவிட்டுத் தப்பித்தோம், பிழைத்தோம் என்று உள்ளே வந்து சேர்ந்தேன். ஒருவாறு நாடகம் முடிந்தது. மற்றொரு நாடகத்தையும் நடித்துவிட்டு வேலுநாயர் போய் சேர்ந்தார். அந்த இரு நாடகங்களுக்கும் எதிர்பார்த்தபடி வசூலாக வில்லை. பாட்டுக்கு அதிகமான மதிப்பு இருந்த காலமாதலால் பேச்சிலும், நடிப்பிலும் வல்லவரான வேலுநாயரைப் பொது மக்கள் அவ்வளவாக விரும்பவில்லை.

மகாபாரதம்

மகாபாரதத்தில் பெரியண்ணா துரியோதன்னாக நடித்தார். நான் துச்சாதன்னாகத் தோன்றினேன். வீட்டில் ஒத்திகை நடை பெற்றது. இன்னின்னவாறு செய்ய வேண்டுமென்று சாரதாம்பாள் அம்மையார் சுருக்கமாகச் சொன்னார்கள். துகிலுரியும் காட்சியைப் பற்றிய குறிப்பு எதுவும் விளக்கமாகத் தெரிந்து கொள்ள என்னால் முடியவில்லை. இதைப்பற்றி அவர்களிடம் கேட்க என் மனம் கூசியது. துச்சாதனனாக நடிக்க நேர்ந்த என் துர்ப்பாக்கியத்தை எண்ணி வருத்தினேன். நாடகத்தன்று கம்பெனி வீட்டில் ரோஜாப்பூ வர்ணத்தில் தோய்த்துப் பலசேலைகளை உலர்த்தியிருந்தார்கள். இந்த சேலைகளையெல்லாம் துகிலுரியும் காட்சியில் அம்மையார் உடுத்திக் கொள்வார்கள் என்று சொல்லப்பட்டது. நாடகம் தொடங்கியது. துகிலுரியும் காட்சியும் வந்தது. என் உள்ளம் ஏனோ பதறியது. கை, நடுங்கின. துரியோதனனாக நடித்த பெரியண்ணாவின் மனநிலை என்னைவிட