பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

261


மும் புளுகும் சுந்தர திர விர சூரன் நானே” என்ற பாடல் முழங்கியது. தூங்கிக்கொண்டிருந்த விகடனை எழுப்பி, தேச விசாரணை நடத்தினார். புதிய கற்பனைகளை உதிர்த்தார். எங்களுக்கெல்லாம் ஒரே சிரிப்பு. கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தோம்.

சிற்றெறும்பின் திருவிளையாடல்

என். எஸ். கே. முகத்தில் திடீரென்று ஏதோ மாறுதல் ஏற்பட்டது. தலையிலிருந்த ரேக்கு ஒட்டிய தகரக் கிரீடத்தை அடிக்கடி எடுத்து, சரிப்படுத்திக்கொண்டார். ஏதோ அவஸ்தைப் படுவதுபோல் அவருடைய முகம் தோற்றம் அளித்தது. வசந்தனின் அட்டகாசம் வழக்கத்திற்குமேல் அதிகமாக இருந்தது. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

“விகடா, எனக்கு ரொம்ப அவசரம். நான் அதிக நேரம் இங்கே நிற்க முடியாது. என்னால் தாங்க முடியவில்லை. நான் உள்ளே போகிறேன். பிறகு வந்து பேசிக்கொள்கிறேன்”.

என்று சொல்லி, அவசர அவசரமாக உள்ளே வந்தார். கிரீடத்தைத் தூக்கி எறிந்தார். தலையில் போட்டிருந்த டோப்பா வைக்கையில் எடுத்தார். “ஆ...ஆ...உஸ்...” என்றெல்லாம் அரற்றினார். விஷயம் விளங்காமல் என்னமோ ஏதோ என்று திகைத்தோம், “என்ன, என்ன?” என்று எல்லோரும் சூழ்ந்து கொண்டோம். “ஒண்னுமில்லேப்பா, சிற்றெறும்பின் திருவிளையாடல்” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

நடந்தது இதுதான். நாடகத்தின் முற்பகுதி முடிந்து, டோப்பாவைக் கழற்றியபோது ஒப்பனையாளரிடம் “ஏம்பா, இதுக்கு தேங்கா எண்ணெய் போட்டு, கொஞ்சம் சரிப்படுத்தி வைத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டிருக்கிறார். அவருடைய ஆணையை உடனே நிறைவேற்றிய ஒப்பனையாளர், எண்ணெய் போட்டு, டோப்பாவைச் சரிப்படுத்தித் தனியே பத்திரமாக ஓரிடத்தில் வைத்துவிட்டார். டோப்பா வைத்த இடத்தில் எறும்புகள் ஏகாந்தமாக ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தன. எண்ணெய் மணத்தில் டோப்பாவைத் தங்கள் இருப்பிடமாக்கிக் கொண்ட சிற்றெறும்புகள் கலைவாணரின் உச்சிக்குடுமித் தலையை நன்றாகப் பதம் பார்த்துவிட்டன. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு நீண்ட காலம் வரையில் கலைவாணர் டோப்பா வைக்கும் போதெல்லாம் சிற்றெறும்புகள் செய்த இந்தத் திருவிளையாடல்களைச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார்.