பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாகவதர் சந்திப்பு

திருப்பூர் முடிந்து வேறு சில ஊர்களுக்குச் சென்றோம். பொன்னமராவதியில் நாடகம் நடித்துக் கொண்டிருந்தபோது ஸ்பெஷலாக வள்ளித்திருமணம் நாடகத்திற்கு எம். கே. தியாகராஜ பாகவதர் வந்தார். அவர் அப்போதுதான் புதிதாக மேடைக்கு வந்து கொண்டிருந்தார். சரியாகப் பேசத்தெரியாது. ஆனால் அற்புதமான சாரீரம். இனிமையாகப் பாடுவார். பாகவதர் அரங்கிற்கு வந்ததும் எங்களை அழைத்து, “நான் ஒன்றும் தெரியாதவன். புதிதாக நாடகமேடைக்கு வந்திருக்கிறேன். நீங்கள் பாய்ஸ் கம்பெனி நடிகர்கள். நன்றாக நடிக்கவும், பேசவும் தெரிந்தவர்கள். நான் ஏதாவது தவறுசெய்தாலும் நீங்கள்தான் சரிப்படுத்திக்கொண்டு என்னைக் கெளரவிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அவர் அவ்வாறு அடக்கத்துடன் பேசியது எங்களுக்கு அதிசயமாக இருந்தது.

வள்ளித்திருமணம் நாடகம், கழுகாசலக் காட்சி தொடங்கியது. பாகவதர் பாடி முடித்துப் பேசியதும் நான் நாரதராக வந்தேன். அவர் ஏதோ பேசினார். வார்த்தைகள் சரியாக வராமல் தடைப்பட்டன. அவர் பேசமுடியாமல் திணறுவதைப் பார்த்து நானே பேசி அவர் பேசவேண்டிய பகுதியை நினைவுபடுத்தினேன். ஒருவாறு காட்சி முடிந்தது. உள்ளே வந்ததும் பாகவதர் என்னிடம் நன்றி தெரிவித்துக்கொண்டார். அவர் அன்றாேடு அந்தச் சம்பவத்தை மறந்துவிடவில்லை. பிறகு திரைப்படத்துறையில் ஈடுபட்டு நட்சத்திரமாகத் திகழ்ந்த நாட்களிலேகூட என்னைச் சந்திக்கும்போது, இந்தப் பழைய நிகழ்ச்சியை நினைவுபடுத்தி மற்றவர்களிடம் இதைப் பெருமையோடு சொல்லி, என்னை அறிமுகம் செய்து வைத்த பெருந்தன்மையை என்றும் மறக்க