பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266


பார்த்து நின்ற சுண்டுர் இளவரசனுக்கு ஒரே திகைப்பு. பலாத்காரம் செய்யக் கையைப் பிடித்தாயிற்று. வழக்கம்போல் அறை விழவில்லை. பின்னல் திரும்பிப் பார்க்கவும் கூடாது. என்ன செய்வார் இளவரசன்? சந்திரவதனா. பெண் வேடம் புனைந்த ஆணாக இருந்தாலாவது சிறிது அதிகமாக நடிக்கலாம். அதற்கும் வழியில்லை. அவள் நிஜமாகவே பெண். அதிலும் மங்கைப் பருவம் கடந்த பெண். பலாத்காரம் செய்யப் பிடித்த கையை விடவும் முடியாமல், வேறு வழியும் தோன்றாமல் திண்டாடினார் இளவரசன்.

அண்ணாசாமியின் ஆவேசம்

ராகவரெட்டி எங்கோ ஒரு மூலையில் அமைதியாக உறங்கினார் என்பது மட்டும் புரிந்தது. அரங்கின் உட்புறம் அமர்க்களப் பட்டது. சுபேதார் அண்ணாசாமியாக வேடம் புனைந்திருந்த பெரியண்ணாவின் குரல் உட்புறம் பயங்கரமாக ஒலித்தது. அவர்கையில் வைத்திருந்த சவுக்கும் யார் மீதோ சாத்துபடி ஆயிற்று. “பளார், பளார்” என்ற ஒசையுடன் விழுந்த சில பூசைகளின் ஒலியும் கேட்டது.

சந்திரவதனவும் சுண்டுர் இளவரசனும் மேடையில் பலாத்காரக் கட்டத்தில் நின்று பரிதவித்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று பேயறைந்தது போன்ற ஒரு பயங்கரமான அடி இளவரசனின் முதுகில் விழுந்தது. அவ்வளவுதான்; அறைந்தபின் ராகவ ரெட்டியால் கீழே இழுத்துத் தள்ளப்பட வேண்டிய இளவரசன், அறைபட்டவுடனேயே விழுந்துவிட்டான். ஐயோ பாவம்... நல்ல உறக்கம் கலைக்கப்பட்டதால் உண்டான கோபம்; உள்ளே தான் வாங்கிய பலத்த அடிகளால் ஏற்பட்ட ஆத்திரம்: எல்லாவற்றையும் சேர்த்துச் சுண்டுர் இளவரசனைப் பலம் கொண்ட மட்டும் தாக்கிவிட்டார் அந்த ராகவரெட்டியார். கீழே விழுந்தபின் மீண்டும் எழுந்து ராகவரெட்டியைப் பார்த்து உறுமி விட்டுப் போக வேண்டிய சுண்டுர் இளவரசன், எழுந்திருக்க முடியாமல் அவஸ்தைப்பட்டு எப்படியோ ஒரு வகையாகத் தட்டுத் தடுமாறி உள்ளே போய்ச்சேர்ந்தார்.