பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

285


பண்ணாருட்டியில் நாடகமும் நிறுத்தப்பட்டது கண்ணனூர், மேட்டுப்பாளையம் ஆகிய ஊர்களிலிருந்து கண்ட்ராக்டர்கள், வந்து போனார்கள். பயனில்லை. சிறந்த நடிகர்கள், உயர்ந்த நாடகங்கள், ஓரளவுக்குக் காட்சியமைப்பு, உடைகள் எல்லாம் இருந்தும் வசூல் இல்லையென்றால் எவர் உள்ளந்தான் வேதனை யடையாது? பெரியண்ணா எப்போதும் சோர்ந்தபடி சிந்தனையில் இருக்கத் தொடங்கினார். இந்நிலையில் ஒரு வாரம் சென்றது. தெய்வச் செயலாக மீண்டும் மேட்டுப் பாளையம் கண்ட்ராக்டர் வந்தார். மேட்டுப்பாளையத்துக்கு ரயில் செலவு நீக்கி ஒரு மாதத்திற்கு ஆயிரத்து அறுநூற்றி இருபத்தைந்து ரூபாய்கள் தருவதாகச் சொன்னார். கம்பெனியின் ஒருமாதச் சாப்பாட்டுக்கும், சம்பளத்திற்கும் குறைந்த பட்சம் அப்போது இரண்டாயிரம் ரூபாய்கள் தேவைப்பட்டன. என்றாலும் எப்படியாவது பண்ணாருட்டியை விட்டு வெகுதூரம் போய்விட வேண்டும் என்னும் எண்ணம் தோன்றியதால் பெரியண்ணா ஒப்புக் கொண்டார். ஊருக்குப் போய் பணம் அனுப்புவதாகச் சொல்லிப்போன கண்ட்ராக்டர் சொன்னபடி பணம் அனுப்பவில்லை. ரயில் செலவுக்குப் பணம் வந்து சேர ஒருவாரம் பிடித்தது. பணம் வந்த பிறகு உள்ளுர்க் கடன்களையெல்லாம் தீர்த்துவிட்டு மேட்டுப்பாளையத்திற்குப் புறப்பட்டோம். வழியில் எத்தனையோ கஷ்டங்கள் ஏற்பட்டன.எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்தோம்.

குழப்பமான சூழ்நிலை

மேட்டுப்பாளையத்தில் சுடுகாட்டின் அருகில்தான் எங்களுக்குக் குடியிருக்க இடம் கிடைத்தது. பெரியாரின் தொடர்பு ஏற்பட்டபின், பேய் பிசாசுப் பயம் போய்விட்டதால் துணிவாக இருந்தோம். பயங்கரமான மழை மேட்டுப்பாளையத்தில். கொட்டகையின் தகரம் ஒருநாள் காற்றில் பிய்த்துக்கொண்டு போய்விட்டது. நாடகங்களுக்கு வசூல் இல்லை. காண்ட்ராக்டரிடமிருந்து பணம் பெற வழியில்லை. அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நடிகர்களும் தொழிலாளிகளும் அடிக்கடி கோவைக்குப் போய் வந்தார்கள். கம்பெனியின் சட்டதிட்டங்களுக்கு யாரும்