பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

289


பலகையால் மூடி விடுகிறார்கள் எதிரிகள். சுந்தரம் தம்பியை முதுகில் கட்டிக்கொண்டு மேலே வருகிறான். வழி பலகையால் மூடப் பட்டிருப்பதைப் பார்க்கிறான். பின் உள்ளிருந்தே கிணற்றின் சுவரை இடித்து வழியுண்டாக்கி, அதன் வழியாக வெளியே வருகிறான். மிகவும் அற்புதமான காட்சி இது. இத்தக் காட்சி பதினைந்து நிமிடங்கள் நடைபெறும். என்ன செய்வது? நேரம் இரவு பன்னிரெண்டு மணி. தாங்க முடியாத குளிர். ஐஸ் போன்றிருந்த தண்ணிரையே மேலே ஊற்றிக் கொண்டு நடித்தேன். நானும், கோபாலனாக நடித்த டி. ஏ. காசிநாதனும் குளிர் தாங்க முடியாமல் அவஸ்தைப்படுவதைச் சபையோர் பார்த்து அனுதாபப்பட்டது எங்களுக்கு ஆறுதலாக இருந்தது.

பம்பாய் மெயில் முடிந்த மறுநாள் தனியே பூங்காவிற்குச் சென்றேன். கம்பெனியின் நிலைமையை எண்ணிப் பார்த்தேன். மூலதனம் எதுவும் இல்லாமல் மேலும் கம்பெனியை நடத்திக் கொண்டு போவது சரியெனத் தோன்றவில்லை. உட்கார்ந்திருக்க முடியவில்லை. எழுந்து உலவினேன். பைத்தியம் பிடித்தவனைப் போலப் பூங்காவெங்கும் சுற்றினேன். ஒய்வில்லாது உழைத்தும், உடுத்திக் கொள்ளச் சரியான உடைகளும் இல்லாத நிலை என்னை மிகவும் துன்புறுத்தியது. சகோதரர்களை விட்டு எங்கேயாவது ஒடிப்போய்விட வேண்டும் என்ற உணர்ச்சி என்னை உந்தித் தள்ளியது. நீண்ட நேரம் யோசனை செய்தேன். இறுதியாக, ஓடிவிடுவது என்ற முடிவுக்கே வந்தேன்.

அன்பரின் அறிவுரை

திடீரென்று ஜீவானந்தம் வந்தார். அவரிடம் நான் என் மன வேதனையைக் காட்டிக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே பேசினேன். ஜீவா அரசியல் விஷயங்களைப் பற்றிப் பேசினார். தேசத்திற்காகப் பல இன்னல்களை அனுபவித்த வீரர்களின் கதைகள் சிலவற்றைச் சொன்னார். அந்தக் கதைகளையெல்லாம் கேட்ட பிறகு, என் முடிவு குலைந்தது. உள்ளம் உறுதிப்பட்டது. எத்தனை துன்பங்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் தீரத்தோடு போராடிச் சமாளிக்க வேண்டும் என்ற நெஞ்சுரம் ஏற்பட்டது.