பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மேனகா திரைப்படம்

கோபிச்செட்டிப்பாளைத்தில் நாடகங்கள் நல்ல வசூலில் நடந்துகொண்டிருந்தபோது, திருப்பூர் ஸ்ரீ சண்முகானந்தா டாக்கீசார் வந்தார்கள். நாங்கள் நடத்தி வந்த மேனகா என்னும் சமூக நாடகத்தைத்திரைப்பட மெடுக்க விரும்பினார்கள். எங்கள் கம்பெனியில் பெயரும் படக் கம்பெனியின் பெயரும் ஒன்றா யிருந்தது. இது, இரு கம்பெனிகளுக்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு இருப்பதுபோல் காட்டியது. நாடகங்களுக்குச் சுமாராக வசூலாகி வரும் சமயத்தில் திடீரென்று நிறுத்திவிட்டுத் திரைப்படத்தில் நடிக்கச் செல்வதென்றால் மனத்திற்குக் கஷ்டமாகத்தானிருந்தது. என்றாலும் எங்கள் உருவம் பாடுவதையும், பேசுவதையும், நடிப்பதையும் நாங்களே பார்த்து மகிழக் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை இழந்துவிட விரும்பவில்லை. எனவே ஒப்புக்கொண்டோம். ஒப்பந்தம் முடிவாயிற்று. எங்கள் நால்வருக்கும், குழுவினார் அனைவருக்குமாகப் பதினாலாயிரம் ரூபாய்கள் கொடுப்பதென்று முடிவு செய்யப்பட்டது. கோபிச்செட்டிப் பாளையத்தில் சமூகச் சீர்திருத்தச் சங்கத்திற்காகப் பெரியார் ஈ. வெ. ரா. தலைமையில் பம்பாய் மெயில் நடைபெற்றது. பெரியார் நாடகத்தைப் பிரமாதமாகப் பாராட்டினார். நல்ல வசூலும் ஆயிற்று. ஏற்கனவே எங்கள் மேல் கோபம் கொண்டிருந்த பிராமணர்களுக்கு இந்த நாடக நிகழ்ச்சி மேலும் கோபத்தை மூட்டியது. கோபி முடிந்ததும் ஈரோடு வந்து சேர்ந்தோம்.

ஈரோட்டில் எம். ஆர். சாமிநாதன் ஜம்புலிங்கம் என்னும் ஒரு சமூக நாடகத்தை எழுதிக் கொடுத்தார். அந்த நாடகத்தை அவசரமாகத் தயாரித்து அரங்கேற்றினோம். இது விதவைக்கு மறுமணம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு சிறந்த