பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

293


நாடகம். தோழர் ஜீவானந்தம் ‘பெண்ணாரிமைக் கீதங்கள்’ என்னும் நூல் ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் “கன்னி விதவைத் துயர் நினைந்திடக் கண் கலங்கிடுமே” என்னும் ஒரு பாடலை எழுதியிருந்தார். அப்பாடல் ஜம்புலிங்கம் நாடகத்திற்காகவே எழுதப்பட்டது போல் இருந்தது. நாடகத்தில் அந்தப் பாடலைச் சேர்த்துக் கொண்டோம். எல்லோரும் பாராட்டினார்கள். நாங்கள் பம்பாய் புறப்படவிருப்பதை யொட்டிப் பல நண்பர்கள் விருந்துகள் நடத்தி வாழ்த்தினார்கள். பெரியாரும் ஒரு பெரிய விருந்து நடத்தினார். சமூகச் சீர்திருத்த சங்கத்திற்கு நாடகம் நடத்திக் கொடுத்ததற்காகப் பெரியார் ஒரு பாராட்டுக் கூட்டமும் நடத்தினார். எல்லோரும் அதிசயப்படும் படும்படியாக அவர் அந்தக் கூட்டத்தில் எனக்கு ஒரு தங்கப்பதக்கமும் பரிசளித்தார். இந்தப் பதக்கம் ஒரு பவுனில் தமது சொந்தப் பணத்தில் செய்யப்பட்டது என்பதைப் பெரியார் அறிவித்தபோது எல்லோரும் வியப்படைந்தார்கள். பெரியார் அவர்களை நன்கறிந்தவர்கள் அவரிடமிருந்து பரிசு பெறுவது எவ்வளவு பெரிய காரியம் என்பதை நன்கு உணர்வார்கள். அதனால்தான் இதை இங்கே குறிப்பிட்டேன்.

1935, செப்டெம்பர், 2ஆம் தேதி எல்லோரும் மேனகா படப்பிடிப்பிற்காகப் பம்பாய்க்குப் பயணமானோம்.

புகைவண்டி பம்பாயை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. எங்கள் எல்லோருடைய உள்ளங்களிலும் மகிழ்ச்சியின் தாண்டவம். ஆங்கிலப் படங்களைக் கண்டு அதிசயித்ததும், வட இந்தியப் படங்களைக் கண்டு மகிழ்ந்ததும், கடைசியாக நம் தமிழிலேயே படம் பேசுவதைக் கண்டு பிரமித்ததும் ஒன்றன்பின் ஒன்றாக என் மனக் கண்முன் தோன்றி மறைந்தன. ரயில் வண்டியே அல்லோல கல்லோலப்பட்டது. எல்லோருடைய நாவிலும் சினிமாப் பேச்சுதான், எடிபோலோவிலிருந்து எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி நடிப்புவரை எங்கள் நடிகர்கள் பேசித் தீர்த்துவிட்டார்கள். நான் மட்டும் மற்றவர்கள் பேச்சில் கலந்து கொள்ளாமல் இன்பக் கனவுகளில் ஆழ்ந்திருந்தேன். நமது படத்தை, நமது பேச்சை, நமதுபாட்டை நாமே சிலமாதங்களில்