பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

317


வைக்க ஏற்பாடு செய்தார் பெரியண்ணா. நாகர்கோவில் மணி மேடையின் பக்கம் ஷராப் கடை தொடங்கப் பெற்றது.

மேனகா படம் வெளி வந்தது. அமோகமான வசூல், எங்கள் நால்வருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. பத்திரிகைகளில் வெளி வந்த விமர்சனங்களையெல்லாம் ஆர்வத்தோடு வாங்கிப் படித்தேன். திருநெல்வேலியில் மேனகா திரையிடப் பெற்றது. நாங்களும் என். எஸ். கிருஷ்ணனும் சென்று கலந்துகொண்டோம். இடைவேளையில் எங்களைப் பேசச் சொல்லி ரசிகர்கள் கூச்சலிட்டார்கள். நானும் என்.எஸ். கிருஷ்ணனும் ரசிகர்களுக்கு நன்றி கூறிப் பேசினோம். கலைவாணர் என்.எஸ். கிருஷணன் தொடர்ந்து படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். எனக்கும் தம்பி பகவதிக்கும் தனித்தனியாகச் சிலரிடமிருந்து படத்தில் நடிக்க அழைப்புக்கள் வந்தன. பெரியண்ணா எங்களைப் பிரித்து அனுப்ப விரும்பவில்லை. நாங்களும் அப்படி போக விரும்பவில்லை. எனவே தொடர்ந்து நடிக்க இயலாது போயிற்று.

நண்பர்கள் வற்புறுத்தல்

சில மாதங்கள் ஒடிமறைந்தன. உழைப்பினிலே இன்பம் கண்ட எங்கள் மூவருக்கும் சும்மா இருப்பது கஷ்டமாக இருந்தது. பெரியார் ஈ. வே. ரா. அவர்கள் மீண்டும் கம்பெனியைத் தொடங்குமாறு வற்புறுத்தியதாக ஈரோட்டிலிருந்து நண்பர் ஈஸ்வரன் எழுதியிருந்தார். எங்கள் மீது அன்பு கொண்ட மற்றும் பல நண்பர்கள் நாடகக்குழுவை நடத்தியே தீரவேண்டுமென அன்புக் கட்டளைகள் விடுத்தனார். எங்கள் பால் மாருத அன்பு கொண்ட கலை வள்ளல் எட்டையபுரம் இளைய ராஜா திரு காசிவிசுவநாத பாண்டியன் மீண்டும் குழுவைத் தோற்றுவிக்குமாறு அன்புடன் வேண்டினார். இரவு நேரங்களில் எங்களுக்குச் சரியான உறக்கம் இல்லை. இராமாயணம், மகாபாரதம், முதலிய நாடகங்களையெல்லாம் பல்வேறு நூல்களைக்கொண்டு நன்கு ஆராய்ந்து புதுமுறையில் இந்த ஓய்வு நாட்களில் எழுதி முடித்தோம். நாடகக் கம்பெனியைத் தொடங்குமாறு நாங்களும் பெரியண்ணாவை வேண்டினோம். எங்கள் சோர்வுற்ற நிலையைக் கண்டு அவரது மனமும் மாறி யது. வாழ்ந்தால் நாடகத் துறையில் வாழ்வது, வீழ்ந்தாலும் இத்துறையிலேயே வீழ்வது என்ற முடிவுடன் நாகர்கோவிலி: லிருந்து புறப்பட்டோம்.