பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சின்னண்ணா திருமணம்

பம்பாயிலிருந்து நாங்கள் திரும்பியதும் நாகர்கோவிலைச் சேர்ந்த வடிவீசுரத்தில் சின்னண்ணா டி. கே. முத்துசாமிக்கும் செல்வி கோலம்மாளுக்கும் 30.4.1937 இல் திருமணம் சிறப்பாக நடந்தேறியது.

திருமணம் முடிந்தபின் எல்லோரும் எட்டையபுரம் சென்றோம், நாடகங்கள் தொடர்ந்து நடைபெற்றன. எட்டைய புரத்திலும் கோவில்பட்டியிலும் சில நாடகங்கள் நடத்தினோம். அடுத்து, திருநெல்வேலியில் புதிய புதிய முறைகளில் பிரமாதமாக விளம்பரம் செய்து, புதிய காட்சிகளுடன் பாம்பாய் மெயில் நாடகத்தை நடந்தினோம். முன்பெல்லாம் பம்பாய் மெயில் கம்பெனியின் முக்கிய நாடகங்களில் ஒன்றாகவும், வசூலைத்தரும் நாடகமாகவும் இருந்தது. இப்போது புதிய காட்சிகளோடு நடித்தும் என்ன காரணத்தாலோ அதற்கு வசூல் ஆகவில்லை. படுமோசமாக இருந்தது. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. நாடகங்கள் சிறப்பாக நடைபெற்றன. மனதைத் தளர விடாமல் உற்சாகத்தோடு நடித்து வந்தோம்.

தேசபக்திக்குத் தடை

அப்பொழுது, நடத்தப் போகும் நாடகங்களே முன்னதாகவே அறிவிக்க வேண்டுமென ஒரு புதிய உத்திரவு கலைக்டரிடமிருந்து வந்தது. நாங்கள் நாடகங்களைக் குறித்து அனுப்பினோம். தேசபக்தி, கதரின் வெற்றி, ஜம்புலிங்கம் ஆகிய மூன்றுநாடகங்களை மட்டும் தடை செய்திருப்பதாக எங்களுக்கு அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ்காரர்கள் சட்டசபையைக் கைப்பற்றி, தலைவர் ராஜாஜி முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த சமயம் அது.