பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

331


தையோ அவரது அனுமதியின்றி நாங்கள் நடித்ததே இல்லை. எழுத்தாளருக்குச் சிறப்பளிக்க வேண்டுமென்பது எங்கள் லட்சி யங்களில் ஒன்று. எனவே ‘குமாஸ்தாவின் பெண்’ நாடகத்தை எழுதி முடித்ததும் அந்தக் கதையை எழுதியவரைத் தேடி அவரிடம் அனுமதிபெற மிகவும் சிரமப்பட்டோம். இந்தி மலையாள நூல்களில் அதன் மூல ஆசிரியரின் முகவரி இல்லை. ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்றை வெளியிட்ட கல்கத்தா நூல் நிலையத்தின் முகவரி இந்தி நூலில் இருந்தது. எனவே அந்நூல் நிலையத்திற்கு எழுதிக் கதாசிரியரின் முகவரியைப் பெற்றோம். அதன்பிறகு அந்நூலின் ஆசிரியை கிருபாதேவிக்கு ஒரு தொகை கொடுத்து, அதன் உரிமையைப் பெற்று நாடகத்தை அரங் கேற்றினோம். 1937 டிசம்பர் 25ந் தேதி திண்டுக்கல்லில் *குமாஸ்தாவின் பெண் நாடகம் சிறப்பாக அரங்கேறியது. நாடக நுணுக்கங்களை நன்கறிந்த புலவர்கள் பலர் இத்தகையை ஒரு அற்புதமான நாடகம் தமிழ் நாடக உலகில் இதுவரை நடை பெற்றதில்லையெனப் புகழ்ந்தார்கள். பிரசித்தி பெற்ற தேசீயக வி க. ஆ. ஆறுமுகனார் இந் நாடகத்திற்கு அருமையான பாடல் களைப் புனைந்து தந்தார்.

கவி ஆறுமுகனார்

கவி ஆறுமுகளுர் அவர்களைப்பற்றி இங்கே சில வார்த்தை கள் குறிப்பிடுதல் கடமையென எண்ணாகிறேன். ஆறுமுகனார் பழம் புலவர்களின் அடிச்சுவட்டிலேயே பாடல்கள் புனைபவர். யாப்பிலக்கண விதிமுறைகளை முறையாகப் படித்தவர் மகாகவி பாரதி யிடம் அளவற்ற பக்தியுடையவர். யாரதி படிப்பகம் என் னும் பெயரால் தாம் வாழும் இராமலிங்கம்பதியிலே ஒரு படிப்ப கம் நிறுவி, நிரந்தரமாக ஹரிஜனத் தொண்டு புரிந்து வருபவர். விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறை சென்ற நல்ல தியாகி. சிறந்த பண்புடையவர். குமாஸ்தாவின் பெண் நாடகத்திற்குப் பாடல்கள் எழுதியதன் மூலம் இவர் எனக்கு அறிமுகமானார். அதன் பின் தயாரான வித்தியாசாகரர், மற்றும் பல நாடகங்களுக்கும், ஏற்கனவே நடைபெற்று வந்த பழைய நாட கங்களுக்கும் இவர் பாடல்கள் புனைந்தார். எங்கள் சமுதாய சீர் திருத்த நாடகங்களைப் பற்றி ஏராளமான கவிதைகள் பாடியிருக்