பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

343


நாள், நாடகத்துறையிலே மறுமலர்ச்சி கண்ட அந்தப் பெருந்தகையின் ஆவி பிரிந்தது. உடனே சென்னைக்கு விரைந்தேன். அவரது புதல்வர் எம். கே. ராதா என்னைத் தழுவிக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறினார். ஆசிரியர் முதலியார் அவர்கள் என்பால் அளவற்ற அன்புடையவர். ‘நான் சொல்லிக் கொடுப்பதை என் இஷ்டப்படி நடித்துக் காட்டுபவன் சண்முகம்’ என்று தமது புதல்வரிடம் அடிக்கடி கூறுவாராம். மரணத் தருவாயில் கூட ‘ஷண்முகத்தைப் பார்க்க விரும்புகிறேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்ததாக நண்பர் எம். கே. ராதா கூறிக் கண்ணிர் விட்டார். இரண்டு நாள் தங்கி ராதாவுக்கு ஆறுதல் கூறிவிட்டுத் திரும்பினேன்.

மேனகா பேசும் படமாக வெளிவந்த பிறகு எங்கள் நாடக மேனகாவுக்கு வசூலாவதில்லை. திரையில் தோன்றிய நடிகையரையே நாடகத்திலும். எதிர்பார்த்தார்கள் ரசிகர்கள். அவர்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக கே. டி. ருக்மணியையும், எம். எஸ். விஜயாளையும் ஸ்பெஷலாக வரவழைத்து நடிக்க வைத்தோம். திரைப்படத்தில் போட்ட நூர்ஜஹான், மேனகா வேடங்களிலேயே மேடையிலும் தோன்றி அவர்கள் நடித்தார்கள். கே. டி. ருக்மணி மனோஹரன் நாடகத்தில் என்னோடு விஜயாளாகவும் நடிந்தார். ஒவ்வொரு ஊரிலும் மனோஹரன் மேனகா நாடகங்களைச் சேர்ந்தாற்போல் வைத்துக்கொண்டு இவ்விரு நடிகையரையும் அழைப்பது வழக்கமாகிவிட்டது.

கலைவாணர் மனத் தாங்கல்

திருவண்ணாமலையிலிருந்து நான் சென்னைக்குச் சென்றிருந்த போது என். எஸ். கிருஷ்ணனுடன் தங்கவும், நீண்ட நேரம் பேசவும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது அவர் மேனகா நாடகத்தில் சாமா ஐயராக நடிக்கத் தம்மை அழைக்காதது பற்றிக்குறை கூறினார். அழைத்தால் எப்போதும் வரச் சித்தமாக இருப்பதாய்த் தெரிவித்தார். “கே. டி. ருக்மணி, எம். எஸ். விஜயாள் இருவரையும் ஸ்பெஷலாக அழைத்துப் போகும்போது உங்களோடு என்றும் உரிமையுள்ளவனான என்னைமட்டும் பெரியண்ணா ஏன் அழைக்கவில்லை?’’ என்று கூறி வருத்தப் பட்டார். எனக்கும் அது சரியாகவே தோன்றியது. நான்