பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

346

 வந்திருந்தார். நாடகக் கதை அவரது இதயத்தை மிகவும் கவர்ந்தது. நாடகத்தைப்பற்றி மேடையில் பேச விரும்புவதாகச் சொல்லியனுப்பினார். நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம். வழக்கம் போல் நாடகம் முடிவதற்கு ஒரு காட்சி இருக்கும்போது பேசுமாறு கேட்டுக் கொண்டோம். அவர் அதற்கு ஒப்பவில்லை. “சுவையான கதையினிடையே நான் பேச மாட்டேன். நான் பேசுவதாக அறிவித்து விடுங்கள். சபையோர் கலையமாட்டார்கள்” என்று கூறினார். எங்களுக்கு வியப்பாக இருந்தது, அப்படி ஒரு போதும் இதற்குமுன் யாரும் பேசியதில்லை. என்றாலும் அவர் கூறியபடியே நாடகம் முடிந்தபின் நகரக் காங்கிரஸ் தலைவர் திரு சா. கணேசன் பேசுவார் என்பதை அறிவித்தோம். நாடகம் முடிந்தது. சா. கணேசன் மேடைக்கு வந்து பேசினார். சபையோர் கலைந்து விடுவார்கள் என்று நாங்கள் பயந்தோம்.என்ன ஆச்சரியம்! ஒருவர்கூட எழுந்திருக்கவில்லை. எல்லோரும் அவர் பேச்சு வன்மையிலே கட்டுண்டு அமைதியாக இருந்தார்கள். அன்றைய வசூல் என்ன தெரியுமா? நூற்றி இருபத்தி நான்கு ரூபாய்கள்! இந்தக் குறைந்த வசூலிலும் அஞ்சாமல் குமாஸ்தாவின் பெண் நாடகத்தைப் பலமுறை நடித்தோம். இலட்சிய வெற்றியையே பெரிதாக மதித்தோம். “உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள் (Workers’ of the World, Unite) என்ற பொன்மொழியைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் முதல் திரையில் எழுதி வைத்தோம். இந்தப் பொன் மொழி சில தனவந்தர்களின் கண்களை உறுத்தியிருக்க வேண்டும்! கம்பெனி எங்கோ பொதுவுடைமைப் பாதையில் செல்வதாக அவர்கள் எண்ணிக்கொண்டார்கள் போல் இருக்கிறது. கட்டுப்பாடாக நாடகங்களைக் காண மறுத்து விட்டார்கள். நல்லவர்களின் அமோகமான பாராட்டுக்கள் இருந்தன. நாடகங்கள் சிறந்த முறையில் நடைபெற்றன. காரைக்குடியிலிருந்து வெளி வரும் திரு சொ. முருகப்பாவின் ‘குமரன்’, தமிழ்க்கடல் ராய சொக்கலிங்களுரின் ‘ஊழியன்’ வார இதழ்களில் சிறந்த விமர்சனங்கள் வந்தன. ஆனால் இறுதி வரை வசூலே இல்லை.