பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

363


நாடகம் மிகச் சிறப்பாக நடந்தது. மிகுந்த ஆர்வத்தோடு நாடகம் முழுவதையும் பார்த்த எம். வி. ராஜம்மா, வாசன் ஆகியோர் நாடகம் முடிந்ததும் உள்ளே வந்தனார். பெண் வேடத்தோடிருந்த கலைஞர் ஏ. பி. நாகராஜனை ஏற இறங்கப் பார்த்தார்கள். உற்று நோக்கினார்கள். “சீதாவாக நடித்த இந்தப் பையனப்போல் ராஜம்மா நடித்துவிட்டால் போதும். படம் முதல் தரமாக அமைந்து விடும்” என்றார் எஸ். எஸ். வாசன். உடனே ராஜம்மா, ஐயோ! இந்தப் பையனைப்போல் எப்படி நான் சீதாவாக நடிக்கப் போகிறேன்? எனக்கு பயமாக இருக்கிறது!” என்று நாகராஜனின் நடிப்பை வியந்து போற்றினார். ஆம்; அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை! கலைஞர் நாகராஜனின் அந்தப் பெண் வேட நடிப்பு, அன்று நடிகர்களாகிய எங்களை யெல்லாம் கூட பிரமிக்க வைத்தது.

ஸ்பெஷல் ரயில்

சமுதாயச் சீர்திருத்த நாடகமாகிய குமாஸ்தாவின் பெண்ணைப் படமெடுக்க முன் வந்த எங்களைப் பாராட்டும் முறையில் பெரியார் ஈ. வெ. ரா. அவர்கள் கம்பெனி முழுவதுக்கும் ஒரு பெரிய விருந்து நடத்தினார். 18-7.40இல் நடைபெற்ற இவ் விருந்தில் நகரப் பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டனார். எல்லோர் உள்ளத்திலும் மகிழ்ச்சி குடி கொண்டிருந்தது.

குமாஸ்தாவின் பெண் படபிடிப்புக்குரிய எல்லா ஏற்பாடுகளும் முடிந்து விட்டதால் அதற்கு வசதியாகக் கம்பெனி கோவைக்குச் சென்றது. இதில் குறிப்பிடத்தக்க ஒரு விசேஷம் ஈரோட்டிலிருந்து கோவைக்கு, ஸ்பெஷல் ரயில் ஒன்று எங்களுக்காகவே விடப்பட்டது. அறிஞர் அண்ணா உட்பட ஈரோடு நகரப் பிரமுகர்கள் அனைவரும் வந்து எங்களை மகிழ்ச்சியோடு வழியனுப்பினார்கள்.