பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

372


லிருந்து பெரியண்ணா எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார். பெண்ணைப் பார்த்ததாகவும், நானும் வந்து பார்த்தால் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். சேலம் பஞ்சநதம் செட்டியார் வீட்டில் தங்கியிருப்பதாகவும் கடிதத்தில் கண்டிருந்தது. நான் உடனே என் திருமணம் தமிழ் மண முறை யில் நடை பெறவேண்டும் என்பதை வற்புறுத்தி, அதற்கான காரணங்களையும் விளக்கிப் பெரியண்ணாவுக்கு நீண்ட கடிதம் எழுதி அவசரத் தபாலில் போட்டேன். சின்னண்ணா விரும்பியபடி அன்றிரவே நானும் எங்கள் நண்பர் எம். கே. கிட்டுராஜூவும் பெண் பார்த்து வரச் சேலம் புறப்பட்டோம்.

தமிழ்த் திருமணம்

மறுநாள் சேலம் வந்து சக்தி பிலிம்ஸ் நிர்வாகி நண்பர் சீனிவாசன் இல்லத்தில் தங்கினேன். நான் சேலம் வருவதற்குள் பெரியண்ணா மதுரைக்குப் புறப்பட்டு விட்டார். முதல்நாள் நான் பெரியண்ணாவுக்கு அனுப்பிய அவசரக் கடிதம் பஞ்சநதம் செட்டியார் வீட்டுக்குச் சென்றபோது கிடைத்தது. அதை வாங்கி மீண்டும் ஒருமுறை படித்தேன். இந்தக் கடிதத்தைப் பார்த்தால் பெரியண்ணாவின் மனம் ஏதேனும் புண்படுமோ என்ற ஐயம் தோன்றியது. உடனே கடிதத்தைக் கிழித்தெறிந்து விட்டேன். பெண் வீட்டார் சார்பில் சில நண்பர்கள் வந்திருந்தார்கள். “தமிழ்த் திருமண முறையில் சடங்குகள் நடப்பதற்கு பெண் வீட்டார் சம்மதிப்பார்களா?” என்று கேட்டேன். அவர்களில் எனக்கு மிகவும் நெருங்கிய பிராமண நண்பர் ஒருவர், “ஏன் வட மொழிமீது உங்களுக்கு வெறுப்பா?” என்று கேட்டார். நான் மிகுந்த அடக்கத்தோடு, வடமொழியாகிய சமஸ்கிருதத்தின் மீது எனக்குச் சிறிதும் துவேஷம் இல்லை. ஆனால் நான் தமிழன். என் திருமணம் என்னுடைய தாய்மொழியாகிய தமிழில் தேவாரத் திருமுறைகளை ஓதி நடைபெறவேண்டும். இதுவே என் கொள்கை என்றேன். பிறகு நண்பர் சிரித்துக்கொண்டே, “அதெல்லாம் உங்கள் விருப்பம்போல் நடக்கும். பெண்வீட்டார் தடையொன்றும் சொல்லமாட்டார்கள்” என்றார்.

மைத்துணியின் வரவேற்பு

14-ஆம் தேதி முற்பகல் பெண் வீட்டிற்குச் சென்றேன் பெண்ணுக்குத் தந்தையார் இல்லை. தாயும், தாயோடு பிறந்த,