பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

377


நான் பாகவதருக்கு எழுதினேன். ஆனாலும், அவருக்கு மன நிறைவு ஏற்படவில்லை. மதுரைக்கு வந்து நாடகத்தைப் பார்த்த பிறகுதான் அவருக்குப் பூரண திருப்தி ஏற்பட்டது. பகவதியின் நடிப்பையும் பாட்டையும் அவர் அபாரமாகப் புகழ்ந்து பாராட்டினார். வாய்ப்பு நேரும்போதுதானே வளர்ச்சி தெரியும்! ஒருவருடைய ஆற்றலை அறிய வேண்டுமானல் அதற்குரிய பொறுப்பினை அவரிடம் ஒப்படைக்க வேண்டுமல்லவா? தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பினைத் தம்பி பகவதி, அரிய சாதனையாக வெளிப்படுத்தி அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்றார்.

காற்றும் மழையும்

சிவலீலா அரங்கேறிய ஐந்தாம் நாள் நவாப் இராஜ மாணிக்கம் நாடகம் பார்க்க வந்திருந்தார். அன்று மாலை ஆறு மணிக்கே காற்றும் மழையும் அமக்களப்படுத்தின. ஒப்பனைக்காகத் தனியே தகரக் கொட்டகை போட்டிருந்தது. அதன் நடுவே சில தென்னை மரங்களும் இருந்தன. எல்லோரும் வேடம் புனைந்து கொண்டிருந்தனார். மணி 7-30 ஆயிற்று. மழை நிற்கவில்லை. காற்றின் வேகமும் தணியவில்லை. இந்த நிலையில் பளீரென்று ஒரு மின்னல்; மின்சார விளக்குகள் அணைந்தன. மின்னொளி நிபுணர் ஆறுமுகம் உள்ளே வந்தார். நானும், தம்பி பகவதியும் ஒப்பனைக்காகப் போடப்பட்டிருந்த ஷெட்டின் உள்ளே, தென்னை மரத்தின் ஒரமாக நின்று, “என்ன மின்சாரக் கோளாறு?” என்று ஆறுமுகத்தை விசாரித்தோம்; அவ்வளவுதான். தீடீரென்று ஒரு சூறைக் காற்று; தென்னை மரம் முறிந்து பயங்கரமான சத்தத்துடன் தகர ஷெட்டின் மீது விழுந்தது. நாங்கள் நின்ற இடத்தில் எங்கள் தலைக்கு மேலே போட்டிருந்த தகரம் பிய்த்துக் கொண்டு தடாரென்று எங்கள் காலடியில் விழுந்தது. நாங்கள் பிழைத்தது ‘இறைவன் திருவருள்’ என்றே சொல்ல வேண்டும். புத்தம் புதிய காட்சிகள் யாவும் நனைந்தன.....

என்ன ஆச்சரியம்! திடீரென்று மழை ஒய்ந்து, சில நிமிடங்களில் வானத்தில் நட்சத்திரங்கள் தோன்றின. சிவலீலாவுக்கு ஏற்பட்ட திருஷ்டி என்று சில பெரியவர்கள் பேசிக் கொண்டார்கள். மின்சார வீசிறிகளைச் சுழல விட்டு, நனைந்த ஆடைகளை