பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

400


மாக, என் இல்லத்திலேயே என் மனைவிக்குத் துணையாகத் தங்கி விட்டார். கம்பெனியின் ஒரே நடிகையான திரெளபதியும் வயது வந்த பெண்ணாக இருந்ததாலும், அவளுக்கு துணையாக வேறு யாரும் கம்பெனியில் இல்லாததாலும் வசதியைக் கருதி எங்களுடனேயே இருந்து வந்தாள்.

செல்லக் கோபம்

மதுரையில் நாங்கள் குடியிருந்தவீட்டின் மாடியறையில் நான் மனேவியுடன் தங்கியிருந்தேன். அக்காள் தன் மகனின் திருமணத்திற்குக் கூட நாகர்கோவிலுக்குப் போகவில்லை. மகனும் மருமகளும் மதுரைக்கு வந்து தனிக்குடித்தனம் தொடங்கினார். அப்போதும் அக்காள் என்னைவிட்டுப் போக மறுத்துவிட்டார். மகனிடம் சண்டை எதுவும் இல்லையானலும், அவன் இல்லத்தில் சென்று மருமகளுக்குத் துணையாக இருக்க அவர் ஏனோ விரும்ப வில்லை. அடிக்கடி போய் விசாரிப்பதோடு நிறுத்திக் கொண்டார்.

அக்காள் நல்ல உழைப்பாளி. வீட்டு வேலைகளையெல்லாம் தாமே தலைமேல் போட்டுக்கொண்டு செய்வார். நாடகம் முடிந்து வீடு திரும்பியதும், ஏதாவது சாப்பிட்டுவிட்டு நான் மாடிக்குச் செல்வேன். நான் வரும்வரை பெரும்பாலும் என் மனைவி உறங்கு வதே இல்லை. ஆனால், அயர்ந்து உறங்குவதுபோல் பாவனை செய் வாள். நான் நடிகனல்லவா? எனக்குத் தெரியாதா? சிறிது சல சலப்போடு அருகில் அமர்வேன் நான். கீழேயிருந்து அக்காளின் குரல் கேட்கும்.

“ ஏ சாந்தா, ஏ......சாந்தா”

ஆம், என் மனைவி மீனாட்சியை சாந்தா என்று தான் கூப்பிடுவோம். ஏ. சாந்தா என்றதும் “என்னக்கா?” என்பேன் நான்.

“இந்தப் பாலை வாங்கிகிட்டுப் போகச் சொல்லப்பா சாந்தாவை”

“அவ அசந்து தூங்குரு அக்கா; இதோ நானே வர்றேன்” என்று எழுந்திருப்பேன்.

அதற்குள் என் மனைவி அடித்துப் புரண்டு எழுந்து, வேகமாகக் கீழே ஒடுவாள்.