பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

404


மாக நடிப்பவர் இராமசாமி, இதைத் திடீரென்று மற்றொருவர் நடிப்பது சிரமம். எனவே நாடகத்தை நிறுத்துவதா, இன்னொரு வரைப் போட்டு நடத்துவதா என்று சிந்தனையில் ஆழ்ந்தோம். இரவு 9.30க்குநாடகம். மாலை5மணிவரை எங்களுக்கு ஒருமுடிவும் ஏற்படவில்லை. நன்முகப் பாடவேண்டிய வேடம் ஆஞ்சநேயர். 6 மணி சுமாருக்கு அம்மாசத்திரதிலிருந்து செய்தி வந்தது. இரவு 11 மணிக்குமேல், தானே நடிக்க வந்து விடுவதாகக் கலைஞர் இராமசாமி ஆள் முலம் சொல்லியனுப்பினார்.

அன்றிரவு இராமாயணம் நடந்தது. ஆஞ்சநேயர் வேடத்தை அவரே நடித்தார். நடிப்பில் விசேஷ மாற்றங்கள் எதுவுமில்லை. வழக்கம் போலவே நடித்தார். தந்தையார் மறைந்த அன்றும் நாடகம் தன்னால் நின்றுவிடக் கூடாது என்ற உணர்வோடு வந்து தன் கடமையை நிறைவேற்றிய அந்தக் கலைமாமணியின் கண்ணியத்தையும் கலையார்வத்தையும் கண்டு எல்லோரும் வியப்பெய்தினோம். 30 ஆண்டுகளுக்கு முன் கலைத் துறையிலே நடிப்பிசைப் புலவர் இராமசாமி காட்டிய அந்தப் பொறுப்புணர்ச்சி இன்னும் என் நினைவை விட்டு அகலவில்லை.

இலட்சிய நடிகர் இராஜேந்திரன்

மதுரையில் சிவலீலா தொடங்கியபோது இராஜேந்திரன் எங்கள் குழுவில் சேர்ந்தார். ஏதோ சில்லரை வேடங்களில் கூட்டத்தோடு நடித்து வந்தார். கும்பகோணம் வந்த பிறகுதான் அவரைக் கவனித்தோம். ஒளவையாரில் அங்கவையை மணந்து கொள்ளும் திருக்கோவலூர் மன்னன் தெய்வீகன் பாத்திரம் அவருக்குத் தரப்பட்டது. சிறிய வேடம்தான், அதனைத் திறமையாக நடித்தார் இவர். தோற்றப் பொலிவும் பிரமாதமாக இருந்தது. சம்பூர்ண இராமாயணத்தில் சத்துருக்கனன் வேடத்தில் தோன்றினார். பரதனாக நடித்த சீனிவாசனுக்கு உண்மையான தம்பியைப் போலவே இருந்தது அவரது தோற்றம், “பெரிய வேடங்களையெல்லாம் நெட்டுருப் போட்டு வை. வாய்ப்பு நேரும் போது நடிக்கலாம்” என்று அவரிடம் சொல்லி வைத்தேன். சிவலீலா இரண்டாவது முறை தொடர்ந்து நடந்தது. ஒரு நாள் இராஜேந்திரன் என்னிடம் வந்தார். “பெரிய வேடம் ஏதாவது: