பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நாடக உலகில் நுழைந்தோம்

‘ஒரு தொழிலும் இல்லாதார் நாடகக்காரரானார்’ என்று நாடகக் கலைஞர்களைப்பற்றி மக்கள் இழித்துரைத்த காலம். கூத்தாடிகள், குடிகாரர்கள் இவை போன்ற பெயர்கள் நாடகக்காரர்களுக்கு அடைமொழிகளாயிருந்து வந்தன. நாடகக்காரன் என்றால் குடியிருக்க வீடும் கொடுக்கமாட்டார்கள். அவ்வளவு நல்ல பெயர் நடிகனுக்கு. இளம் பெண்களைக் கடத்திச் சென்று விடுவான் என்று மக்கள் பயப்பட்டார்கள். இந்தப் பயத்தில் ஒரளவு உண்மையும் இருந்தது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நாடகம் பார்க்க அனுமதிக்கமாட்டார்கள். நாடகம் பார்த்த இளைனார்கள் அதை நாலு பேருக்கு நடுவில் சொல்லிக்கொள்ள வெட்கப்படுவார்கள். நாடகக் கொட்டகைக்கு எதிரிலேயே ஒரு கள்ளுக் கடையும் இருக்கும்.

ஆம்; இயல், இசை, நாடகம் என்று தமிழ்மொழியை மூன்றாக வகுத்த நாட்டிலேதான் இந்தக் கேவலநிலை. நாடகத்திற் கென்று தனித்தமிழ் கண்ட நம் நாட்டில், நாடகத்துறை இவ்வாறு அவல நிலையில் இருந்த சமயத்தில் தான் நான் நாடக உலகில் நுழைய நேர்ந்தது.

தாயும் தந்தையும்

என் தந்தையார் திரு டி. எஸ். கண்ணாசாமிப்பிள்ளை; தாயார் திருமதி சீதையம்மாள். தந்தையாரும் ஒரு நடிகர். பெண் வேடம் தரித்து நடிப்பதில் பிரசித்தி பெற்றவர். அக்காலத்தில் பிரபலமாய் விளங்கிய வள்ளி வைத்தியநாதையர், அல்லி பரமேசுவரய்யர் ஆகியோர் நடத்தி வந்த கம்பெனிகளில் என் தந்தையார் நீண்டகாலம் பணி புரிந்திருக்கிறார்.