பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

414


வளர்ந்தவளை எவனுக்காவது பிடித்துக் கட்டி வைக்காமலிருக்கலாமோ வென்று கேட்க ஊரிலே பல பித்தர்களிருந்தனார்; எத்தகைய பொருத்தமும் தட்சணை தந்தால் சரியாக இருக்கின்றதெனக் கூறும் சோதிடர் சிலர் இருந்தனார். உலகில் எது இல்லை? பளபளப்பான தோலைப் போர்த்துக் கொண்டிருக்கும் பாம்பு இல்லையா? எப்படியோ ஒன்று என் கழுத்தில் தாலி ஏறிற்று”

கசப்பு மருந்தைக் கனியுடன் கலந்து கொடுப்பது போல் நகைச் சுவையுடன் நல்லுணர்ச்சி யூட்டுவது தோழர் அண்ணாதுரையின் தனிப் பண்பு. கீழ்வரும் வாக்கியங்களைப் படித்துப் பாருங்கள்.

“சீதாவுக்கு ராமு என்ற ஒருவன் மேல் ஆசை; அவனுக்கோ கோயில், குளம், பூஜை, புத்தகம் முதலியவற்றிலே ஆசை; அவளையும் கல்யாணம் செய்து கொண்டு அவன் கோயிலுக்குப் போவதை எந்தக் கடவுள் வேண்டாமென்று கூறிவிடுமோ தெரியவில்லை!...... எந்தக் கோயிலிலும் தேவியிருக்க, நாம் ஏன் கல்யாணம் வேண்டா மென்று சொல்ல வேண்டுமென்று ராமு யோசிக்கவில்லை.”

என்கிறார் தோழர்.

காந்தாவின் மீது ராமு கடைக்கண் செலுத்தவில்லையாம்: இதைக் காந்தா உதாரணத்துடன்,

“அவரோ பக்தர்களின் பாடலைக் கேட்டுக் கேட்டு மெளனமாக இருக்கும் பழக்கம் கொண்ட தேவன்போல் என் கண்களின் வேண்டுகோளைக் கண்டு, அசையா உள்ளங் கொண்டவராகவே யிருந்தார்”

என்று அழகாய்க் கூறுகிறாள்.

நினைத்ததைக் கொடுக்கும் ‘கற்பகவிருட்சம்’ ‘காமதேனு’ என்பன போன்ற நைந்துபோன பழைய உதாரணங்களுக்கு, அண்ணாதுரையின் கற்பனையில் எழுந்த புதிய உதாரணம்,

மிராசுதாரர் அவளுக்கு ‘அலாவுதீனின் தீபமானார்’ என்பது இலக்கியச் சுவைக்கு ஒர் எடுத்துக் காட்டு.