பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

415


“நான் தொட்டு விளையாட முடியாத பருவம் என் கிட்ட வரமுடியாத வயது ... அவன் என்ன செய்தான் தெரியுமோ? யாரது புதிதாக இருக்கிறதே என்று நான் பார்த்தேனே இல்லையோ, ஒரே தாவாகத் தாவி என் நெஞ்சிலே புகுந்து கொண்டான். அந்த உருவம் எதிர் வீட்டு வாசற்படியண்டைத் தானிருந்தது; ஆனால் நெஞ்சிலே சித்திரம் பதித்து விட்டது.”

இந்தச் சொற்றொடரை “வசன கவிதை” என்று ஏன் கூறக் கூடாது?

வாசகத் தோழர்கள் மேற்போக்காகக் கதையைக் படிக்கக் கூடாதென்பதற்காகச் சிலவற்றை எடுத்துக் கூறினேன். காகித விலையேற்றம் கையைப் பிடித்து நிறுத்துகிறது. கடைசியாக தான் கூறுவது ஒன்றே. எழுதியவர் பால் கொள்கை காரணமாகவோ, தனிப்பட்ட முறையிலே விரும்பு வெறுப்புகளிருந்தால் அவற்றையெல்லாம் ஒரு புறம் மூட்டை கட்டி வைத்து விட்டுப் படிக்கத் தொடங்குங்கள் - இது போன்ற பல கதைகளைத் தமிழருக்களிக்குமாறு மனமார வாழ்த்துங்கள்”

நான் இந்த முன்னுரையினை எழுதிய அந்தநாளில் அண்ணாவுக்கு அறிஞர் என்ற அடைமொழி இல்லை. அவர் நாடகாசிரியராகவும் வரவில்லை. நடிகராகவும் மேடையேறவில்லை. எழுச்சி மிக்க தலையங்கங்களையும் சில திறனாய்வுக் கலைக் கட்டுரைகளையும் தவிர அதிகமான கட்டுரைகளோ கதைகளோகூட எனக்குத் தெரிந்தவரையில் எழுதாத காலம் அது. இந் நிலையில் அவரை வருங்காலத் தமிழர் தலைவர் என்று எழுதினேன் நான். எப்படி எழுதினேன்? ஏன் எழுதினேன்? நானா எழுதினேன்? இல்லை. இல்லை. இறைவன் என்னை எழுத வைத்தான். ஆம், அதுவே உண்மை. தெய்வ வாக்குப் பலித்தது!