பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

418


எனவே எங்கள் கணக்குப்பிள்ளை ஏ. டி. தர்மராஜூ ஆர்.எம்.வீரப்பனைக் கணக்குகள் எழுத நன்கு பயன்படுத்திக் கொண்டார். கணக்குப் பிள்ளையோடு அவர் எழுதிக் கொண்டிருப்பதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். இந்தப் பையன் நல்ல நிர்வாகி யாக வருவான் போல் தோன்றுகிறது. என்று அன்றே கணக்குப் பிள்ளையிடம் கூறினேன். ஆர். எம். வீரப்பனுக்கும், எஸ். வி. சுப்பையாவுக்கும் மிகுந்த நட்பு. இருவரும் எப்போது பார்த்தாலும் நெற்றியில் திருநீற்றோடு தான் காட்சியளிப்பார்கள். சுப்பை யாவைவிடப் பெரியவர்கள் சிலர், என்னப்பா, நீதான் பண்டா ரமாப் போயிட்டே வீரப்பனையும் பண்டாரமாக்கிடா தேப்பா” என்று வேடிக்கையாகப் பேசுவார்கள்.

கே. ஆர். இராமசாமிக்கும், எஸ். வி சுப்பையாவுக்கும் எந்நேரமும் தகராறுகள். பிரண்டு இராமசாமிக்கும் இதில் பங்குண்டு. இதற்குக் குறிப்பான காரணம் எதுவும் சொல்ல இயலாது. நாடகக் கம்பெனிகளில் இதுபோன்ற சண்டைகளும், சமரசங்களும் சாதாரண நிகழ்ச்சிகள். இரண்டு நடிகர்கள் சண்டை போட்டுக் கொள்வார்கள். இறுதியில் சண்டை முற்றி ஒருவரைக் கம்பெனியிலிருந்து விலக்கப்படுவார்; விலகுவதற்குச் பூசல் வளர்ந்துவிடும். ஒருவர் விலக்கப்படுவார். விலக்குவதற்குக் காரணமாயிருந்த நடிகரே அவரைப் போய் வழியனுப்பி விட்டுக் கண்கலக்கதோடு திரும்புவார். இத்தகைய நிகழ்ச்சிகள் எத்தனை எத்தனையோ எங்கள் கம்பெனியில் நடைபெற்றுள்ளன.

இரு இராமசாமிகளும் ஒரே கட்சி

கே.ஆர்.இராமசாமியும், பிரண்டு இராமசாமியும் கம்பெனியின் பழைய நடிகர்கள். இவர்களுக்குப் பெரியண்ணாவிடம் மிகுந்த செல்வாக்கு. சுப்பையா தன்னை ஏதேதோ கெட்ட வார்த்தைகள் சொல்லி ஏசிவிட்டதாக கே. ஆர். இராமசாமி பெரியண்ணாவிடம் புகார் செய்தார். பெரியண்ணா சுப்பையா வைக்கூப்பிட்டு விசாரித்தார். சுப்பையாவின் பதில் அடக்கமாக இல்லை. பெரியண்ணாவுக்குக் கோபம் மூண்டது.

“குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தலரிது”