பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34


திரு.பி.எஸ். வேலுநாயர் பின்பாட்டுப் பாடுவதிலிருந்து ராஜபார்ட் வேடத்திற்கு வரத் துாண்டுகோலாயிருந்தவர் என் தந்தையார். இச்செய்தியினைத் திரு நாயரவர்களே என்னிடம் கூறி, என் தந்தையாரைப் பாராட்டினார். அந்த நாளில் எல்லா நாடக நடிகர்களுக்கும் ஆசிரியராக இருந்தவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். அவரைத் தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் என்றே எல்லோரும் குறிப்பிடுவார்கள். என் தந்தையும் அவரது மாளுக்கர்களிலே ஒருவர்.

நாடகத் தொழிலுக்கு அக்காலத்தில் தாய் வீடாக விளங்கியது மதுரைமாரு கரம். நாடகக் கம்பெனிகள் பெரும்பாலும் மதுரையிலிருந்தே தொடங்கும். வேறு ஊர்களில் நாடகம் தொடங்குபவர்கள்கூட மதுரை என்றே போட்டுக் கொள்வது வழக்கம், எனவே, என் தந்தையாரும் மதுரையை இருப்பிடமாகக் கொண்டார்.

தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை

அந்தச் சமயம், சங்கரதாஸ் சுவாமிகளை ஆசிரியராகக் கொண்டு ஒரு நாடகக் கம்பெனி தொடங்கியது. இளஞ் சிறுவர்களையே முழுதும் நடிகர்களாகக் கொண்ட அந்தச் கம்பெனியின் பெயர், மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா.

ஒரு நாள் என் தந்தையார் என் சகோதரர்களுடன் என்னையும் அழைத்துக் கொண்டு, தமது ஆசிரியராகிய சுவாமிகளைக் காணச் சென்றார். அப்போது எங்களைக் கூர்ந்து நோக்கிய சுவாமிகள், “கண்ணா, உன் குழந்தைகளே இந்தக் கம்பெனியிலே சேர்த்துவிடு, நான் கவனித்துக் கொள்கிறேன்” என்றார். நாடகத்துறையை வெறுத்திருந்த தந்தையார் தயங்கினார். ‘குழந்தைகள் படிக்கிறார்கள்; அவர்களுடைய படிப்பு ...’ என்று ஏதோ சொல்ல முயன்றார். உடனே சுவாமிகள், “நானே தமிழ்ப் படிப்பும் சொல்லி வைக்கிறேன்; படித்து வக்கீல் உத்தியோகம் செய்யப் போகிறார்களா, என்ன! நல்ல சந்தர்ப்பம், இங்கேயே சேர்த்துவிடு” என்று வற்புறுத்திச் சொன்னார்.