பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

428


எண்ணங்கள் அலமோதிக் கொண்டிருந்தனவோ ; இறைவனே அறிவான்! பெரியாரின் பெருங்குணம்

1943 அக்டோபர் 30ஆம் நாள். குடும்ப விளக்கு சிறிது சிறிதாக மங்கத் தொடங்கியது. டாக்டர் வந்து பார்த்தார். கண் கலக்கத்தோடு நின்ற எனக்கு ஆறுதல் கூறினார். அதிகமாகப் போனல் இன்னும் ஒரு வார காலந்தான்... நீங்கள் விரும்பினால் இப்பொழுதே ஈரோட்டுக்குக் கொண்டு போகலாம். இனிநாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்றார். இது நான் முன்னரே எதிர் பார்த்ததுதான். எனவே புதிதாக அதிர்ச்சி எதுவும் ஏற்பட வில்லை. குடும்பத்தார் அனைவரும் வந்து பார்த்தார்கள். பெரியண்ணாவிடம் கலந்து பேசினேன். மனைவியை ஈரோட்டுக்கே கொண்டு வந்து விடலாம் என முடிவு செய்தோம். ஆனால் புதிய சிக்கல் ஏற்பட்டது. காச நோயால் பீடிக்கப்பட்டுக் காலனின் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் என்காதல் மனையாளை ஈரோட்டில் எங்கே படுக்க வைப்பது? இன்னும் இரண்டு நாளில் இறந்து விடுவாள் என்ற நிலையில் பட்டக்காரர் பங்களாவில் படுக்க வைப்பது எனக்கே சரியாகத் தோன்றவில்லை. தனி வீடு தேடி அலைந்தேன். நிலமையை அறிந்த எவரும் எங்களுக்கு வீடு கொடுக்க முன்வரவில்லை. பிறந்தவர் யாவரும் இறப்பது உறுதி என்பது எல்லோருக்கும் தெரியும். என்றாலும் வீடுகொடுக்க அஞ்சினார்கள். அப்போது ஒளவையார் நாடக நூல் பெரியாரின் தமிழன் அச்சகத்தில் அச்சாகி முடிந்திருந்தது. அதற்குப் பதிப்புரை எழுத வேண்டியதுதான் பாக்கி. சிந்தனையைச்சிறிது இலக்கியத் துறையில் செலுத்த எண்ணித் தமிழன் அச்சகத்திற்குள் நுழைந்தேன். துணையாசிரியர் புலவர் செல்வராஜ் அவர்களிடம் நிலைமையைச் சொல்லிக் கொண்டிருந்தேன். உள்ளிருந்து ஈ. வெ. ரா. பெரியார் வந்தார். “என்ன மிகவும் சோர்ந்திருக்கிறீர்களே; மனைவி எப்படி யிருக்கிறார்?” என்று அன்போடு விசாரித்தார். டாக்டர்கள் கைவிட்டதையும் மனைவியை ஈரோட்டுக்குக் கொண்டுவர இருப்பதையும் கூறினேன். பெரியார் மிகவும் கவலையோடு ஆறுதல் கூறினார். “மனைவியை இங்கு கொண்டு வந்து படுக்க வைக்க வீடு கிடைக்காமல் திண்டாடுகிறேன்” என்றேன். உடனே பெரியார்