பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

432


களைப்பற்றி எனக்குச் சரியாக நினைவில்லை. நாடகம் நன்றா யிருந்தது, அண்ணாவின் ஜமீந்தார் நடிப்பு அற்புதமாக அமைந்தது. நாடகப் பேராசிரியர் பம்பல் சம்மந்த முதலியாரைப் போலவே அண்ணா நாடகாசிரியராகவும் நாடகத்தில் முக்கியப்பொறுப்பேற்றது எங்களுக்கெல்லாம் பெருமை அளிப்பதாக இருத்தது. கோவை விஞ்ஞான மேதை ஜி. டி, நாயுடு அவர்கள் அன்று தலைமை தாங்கியதாக நினைக்கிறேன். பெரியார், நாடகத்தைப் பிரமாதமாகப் பாராட்டினார். என்னையும் சில வார்த்தைகள் பேசும்படியாகக் கேட்டுக் கொண்டார். பெரியார் அவர்களின் ஆணைப்படி நானும் பேசினேன். இப்படியே தொடர்ந்து சில நாடகங்களில் அண்ணா அவர்கள் நடித்துவிட்டால் பரம்பரை நடிகர்களான எங்களையெல்லாம் மிஞ்சி விடுவார் போல் தோன்றுகிறது. நாடகத்தையே தொழிலாகக் கொண்ட நாங்கள் பல நாட்கள் பயிற்சி பெற்று, ஒத்திகைகள் நடத்தி அதன் பிறகு நாடகங்களை நடிக்கிறோம். அத்தகைய வாய்ப்பும் வசதியும் இல்லாமல், பல்வேறு துறைகளில் பணிபுரிந்துவரும் திராவிட நடிகர் கழகத்தினர் இன்று நடிப்பதைப் பார்த்தால், எங்களை போல் நிரந்தரமாகவே இவர்கள் நாடகத்துறையில் ஈடுபடுவர்களானால், நாங்களெல்லாம் இந்தத் தொழிலையே விட்டுவிட வேண்டியதாக இருக்குமென நினைக்கிறேன்” என்று கூறினேன். அவ்வளவு அருமையாகவும் இயற்கை யாகவும் நடித்தார் அறிஞர் அண்ணா.

என் காலைத் தூக்கி மேலே வை

நாடகத்தில் ஒரு கட்டம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அண்ணா ஜமீந்தராக வந்து ஜமீந்தாரிசத்தின் ஆணவம், சோம்பேறித்தனம், மற்றவர்களை அலட்சியமாகக் கருதும் மனப் போக்கு அத்தனையையும் அப்படியே அப்பட்டமாகக் காட்டினார். எதிரே நின்ற வேலையாளிடம், “அடே, என் காலைத் தூக்கி மேலே வை” என்று சொல்லி, காலைத் தூக்குவதற்குக் கூடப் பண மூட்டைகளுக்குப் பணியாட்கள் வேண்டுமென்ற உண்மையை மிக அழகாகக் காட்டினார். சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டு எதிரேயிருந்த முக்காலியைச் சுட்டிக் காட்டி அவர் வெளிப்படுத்திய அந்த மெய்ப்பாடு பிரமாதமாக இருந்தது.