பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

434


கோட்டை அர்ச்சுனன் முதலியோர் பாராட்டிப் பேசினார். நான் நன்றி கூறுகையில்,

“இராமாயணம், சிவலீலா, கிருஷ்ணலீலா, கந்தலீலா, மகாபாரதம் முதலிய புராண இதிகாச நாடகங்களையே பெரும் பாலும் நடித்து வரும் எங்கள் குழுவுக்கும், நேற்று சந்திரோதயம் என்னும் ஒர் அருமையான சீர்திருத்த நாடகத்தை நடித்துப் பெருமை பெற்றுள்ள அண்ணா அவர்களின் திராவிட நடிகர் குழுவுக்கும் சேர்த்து இந்தப் பாராட்டை நடத்தியது, கோவை மாவட்டத் திராவிடக் கழகத்தின் பெருந்தன்மைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றது. ஆனால் நாங்கள் இந்தப் பாராட்டுக்கு தகுதியுடையவர்கள் அல்லர் என்பதை மிகப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினேன்.

எனக்கு அடுத்தபடியாக நன்றி கூற வந்த அறிஞர் அண்ணா அவர்கள் என் பேச்சை மறுத்தார்.

தோழர் டி. கே. ஷண்முகம், தாம் இந்த பாராட்டுக்குத் தகுதியுடையவர் அல்ல என்று கருதினார். அது அவருடைய அடக்கத்தைக் காட்டுகிறது. அவர் கூறிய நாடகங்களுக்காக மட்டும் இந்தப் பாராட்டினை வழங்கவில்லை. அன்றும் இன்றும் அவர்கள் நடத்தி வரும் குமாஸ்தாவின் பெண், வித்தியாசாகரர், பதிபக்தி, பம்பாய் மெயில், மேனகா, தேசபக்தி போன்ற சமுதாயச் சீர்திருத்த நாடகங்களுக்காகத் தான் பெரியார் அவர்கள் ஷண்முகம் குழுவினரைப் பாராட்டுகிறார். இனியும் பாராட்டுவார். எங்களைப்போல் முழுதும் சீர்திருத்தப் பிரசாரக் குழுவாக டி. கே. எஸ். குழு இருக்க வேண்டுமென்று நாங்கள் எதிர்பார்க்க வில்லை யென்பதை கழகத்தின் சார்பில் நான் சொல்லுகிறேன். அவர்களுடைய ஒளவையார் நாடகத்தில் புராணக் கற்பனைகள் சில இருந்தாலும் தமிழுணர்வினை ஊட்டும் சிறந்த நாடகமாக அது அமைந்திருப்பதை நாம் மறந்துவிடுவதற்கில்லை” என்று கூறிவிட்டுப் பெரியாரைப் பார்த்தார். பெரியார் அவர்கள் சிரித்துக்கொண்டே அதனை வரவேற்பது போல் தலையை அசைத்தார். அன்று அண்ணா அவர்கள் பேசிய அழகிய பேச்சு இன்னும் பசுமையாக என் நெஞ்சத்தில் நிலைத்திருக்கிறது.