பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முதல் நாடகக் கலை மாநாடு

“எல்லோரும் மாநாடுகள் கூட்டுகிறார்களே; நாடகக்கலை வளர்ச்சிக்காக நீங்கள் ஏன் ஒரு தனி மாநாடு கூட்டக்கூடாது?” என்றார் எங்கள் அருமை நண்பர் மதுரை கருப்பையா. எங்களுக்கும் இந்த எண்ணமுண்டு. என்றாலும் நாள்தோறும் நாடகங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒருமாநாட்டின் பொறுப்பினை ஏற்று நடத்துவது மிகவும் சிரமமானது என்று கருதினுேம். மதுரை கருப்பையா பிடிவாதக்காரர். தேசீய மாநாடுகள் சிலவற்றை நடத்திப்பழக்கப் பட்டவர். 1941இல் மதுரையில் நாங்கள் இருந்த போது எங்கள் அரங்கிலேயே ஒரு மாநாட்டைக் கூட்டி அதில் என்னையும் பங்குபெறச் செய்தவர். நகைச்சுவை நடிகர் டி. என் சிவதாணு, நண்பர் கருப்பையாவின் கருத்தினை ஆதரித்தார். கருப்பையாவுடன் தானும் பொறுப்பேற்றுக் கொள்வதாகச் சொன்னார். சிவதாணுவும் கருப்பையாவும் செயலாளர்களாக இருந்து பணிபுரிய ஆர்வத்தோடு முன் வந்தார்கள். செயலாற்றுவதற்கு இருவர் சித்தமாக இருந்ததால் நானும் உற்சாகத்துடன் ஒப்புதல் அளித்தேன். பெரியண்ணாவிடமும் அனுமதி பெற்றேன். ஈரோடு நகரப் பிரமுகர்களும், நகரசபையாரும் ஏனைய அதிகாரிகளும் எங்களோடு ஒத்துழைப்பதாக உறுதி அளித்தார்கள். மாநாட்டுக்குரிய வேலைகளைத் தொடங்க சிவதாணு, கருப்பையா இருவருக்கும் அனுமதி அளிக்கப் பட்டது.

வரவேற்புக் குழுவினர்

மாநாட்டுச் செயலாளர்கள் இருவரும் சுறுசுறுப்பாகப் பணி புரிந்தார்கள். ஒருவாரக் காலத்திற்குள் வரவேற்புக் குழு அமைத்தார்கள். குழுவினார் நகரின் முக்கிய பிரமுகர்களாகவும், நாடகக் கலை வளர்ச்சியில் ஆர்வமுடையவர்களாகவும், எல்லோருடைய நம்பிக்கைக்குப் பாத்திர முடையவர்களாகவும் இருந்தார்கள்.