பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

439


28ஆண்டுகளுக்கு முன் இவ்வாறு பல்வேறு கொள்கை யாளர்களை ஒருங்கு சேர்த்து, கட்டணமும் வைத்து ஒரு நாடக மாநாட்டினை நடத்த முன் வந்தது வியப்புக்குரிய செய்தி யல்லவா? அதுவும் ஒரு நாடக சபையின் பின்னணியிலேயே இதனை நடத்துவதென்பது தனிச் சிறப்பு வாய்ந்ததல்லவா?

முத்தமிழ் நுகர்வோர் சங்கம்

மாநாட்டின் தேதியும் நிகழ்ச்சிகளின் பட்டியலும் விளம்பரப் படுத்தப்பட்ட உடனேயே ஈரோட்டில் புதிதாக ஒரு சங்கம் தோன்றியது இதன் பெயர் முத்தமிழ் நுகர்வோர் சங்கம். இச்சங்கத்தைப் பற்றிய செய்திகள் விடுதலை, குடியரசு இதழ்களில் வெளிவந்தன. நாடகக்கலை மாநாட்டினைப்பற்றி வாரந்தோறும் பெரியாரின் குடியரசு வார இதழில் 1, 2, 3, என்று எண்கள் போட்டுத் தலையங்கம் எழுதப் பட்டது. நாடககலை மாநாட்டை நாங்கள் ஏதோ உள்நோக்கத்தோடு நடத்துவதாகப் பெரியாரிடம் யாரோ சொல்லியிருக்க வேண்டுமென நினைக்கிறேன். அதனால் அவர் மாநாட்டை அழுத்தமாகக் கண்டித்து எழுதினார். மாநாடுக்குக் தலைமை தாங்க வரும் ஆர். கே. சண்முகம் செட்டியாருக்குக் கறுப்புக் கொடி பிடிக்கவேண்டுமென்று முத்தமிழ் நுகர்வோர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாக ஈரோட்டிலுள்ள எங்கள் நண்பர்களில் சிலர் பேசிக் கொணடார்கள். இந்தச் செய்தி எனக்குக் கவலையைத் தந்தது; நான் பெரியார் அவர்களைச் சந்தித்துப் பேச விரும்பினேன். அவர் ஊரில் இல்லையென்றும் சேலத்தில் இருக்கிறாரென்றும் தகவல் கிடைத்தது. கடிதம் எழுதினேன்.

மாநாட்டுத் தேதி நெருங்க நெருங்க எனக்கு மிகுந்த கவலை ஏற்பட்டது. மாநாட்டுத் தலைவரை ரயில் நிலையத்தில் வரவேற்கும்போது கறுப்புக்கொடி காட்டச் சிலர் முயல்வதின் காரணத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. மாநாட்டுக்கு ஒருவாரத்திற்கு முன்பே பெரியார் சேலம் போய்விட்டதால் அவரைச் சந்தித்துப் பேசவும் வாய்ப்பு கிட்டவில்லை. மாநாட்டுக்கு முதல் நாள் காலை அறிஞர் அண்ணா காஞ்சியிலிருந்து வந்தார். அவரைச் சந்தித்துப் பேசினேன். பெரியார் கோபத்தைப் பற்றியும், முத்தமிழ் நுகர்வோர் சங்கம் கறுப்புக்கொடி பிடிக்க இருப்பது பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தேன். அண்ணா