பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

445


மேடையில் வந்து சொற்பொழிவாற்றினார். அச்சொற்பொழிவின் சுருக்கம் இது:

‘தமிழ் நாடகாபிமானிகளே, தமிழ் அன்பர்களே, உங்கள் அனுமதியின்மீது நான் இப்போது வெளியில் ஏற்றி வைத்த தமிழ் நாடகக் கலைக் கொடியானது என்றும் அழியாப் புகழுடன் தமிழ் நாடகத்தின் பெருமையைத் தமிழ் பேசப்படும் நாடுகளிலெல்லாம் பிரகாசிக்குமாறு செய்ய எல்லாம் வல்ல இறைவன் இணையடியினைப் போற்றுகிறேன்.

இந்திய நாட்டில் எங்கும் இதுவரை நாடகத்திற்குத் தனியாக மகாநாடு நடைபெற்றதில்லை. அந்தப் பெருமை தமிழ் மக்களாகிய நமக்குத்தான் கிடைத்திருக்கிறது. இந்தப் பாக்கியத் தையும் பெருமையையும் எனக்குக் கொடுத்த இந்நாடக மகா நாட்டைக் கூட்டிய சங்கத்தார்க்கு என் மனமாாந்த வந்தனத்தைச் செலுத்துகிறேன்.

53 வருடங்களுக்கு முன் நான் தமிழ் நாடகங்களில் ஆட ஆரம்பித்தபோது தமிழ் நாடகம் இருந்த நிலைமையையும், அது தற்காலம் இருக்கும் நிலையையும் கருதுமிடத்து நான் மிகவும் சந்தோஷப்பட வேண்டியவகை இருக்கிறேன். நாடகமாடுவதென்றால் மிகவும் இழிவான ஒரு தொழிலாக எல்லோராலும் கருதப் பட்டு வந்தது. என்னப் பற்றிய ஒரு உதாரணத்தைக் கூறினாலே போதும். நான் நாடகமாடுவதைக் கேள்விப்பட்ட என் நெருங்கிய பந்து ஒருவர், ‘என்ன சம்பந்தம் கூத்தாடியாகப் போய்விட்டானாமே’ என்று கூறினராம். அக்காலத்தில் கூத்தாடி என்பது ஒரு வசை மொழியாகக் கருதப்பட்டது. அக்காலமெல்லாம் போய், பிறகு நாடகம் ஆடுவதில் இழிவில்லை; கற்றவர்களும் அப்படிச் செய்ய லாம், எல்லா வர்ணத்தாரும் செய்யலாம்; குலஸ்திரீகளும் அதில் பங்கெடுத்துக் கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டதற்காகத் தமிழ் நாடக அபிமானிகள் யாவரும் சந்தோஷப்பட வேண்டும்.

நான் இந்த நாடக மகாநாட்டிற்குப் புறப்பட்டபோது சென்னையிலிருக்கும் எனது நண்பர் ஒருவர் “தமிழ் நாடகம் தான் சினிமா வந்தபிறகு செத்துப் போய்விட்டதே. இதற்காக நீங்கள் ஈரோட்டுகுப் போவானேன்?’ என்று கேட்டார்.