பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

448


நாடகப் பேராசிரியருக்கு நகர சபை வரவேற்பளிக்க வேண்டு மென்ற எண்ணத்தை உருவாக்க, நாங்கள் அந்த நாளில் பெரு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது என்பதை அடக்கத் தோடு சொல்லிக் கொள்கிறேன்.

தலைவர் பிரேரணையின் போது தகராறு

நகரசபைத்தலைவர் வரவேற்புப் பத்திரங்களே வாசித்தளித்த பின் மாநாட்டுத்தலைவர் ஆர். கே. சண்முகம் தலைமையுரை நிகழ்த்த ஒளி பெருக்கியின் முன்னே வந்து நின்றார். அப்போது பெஞ்சிலிருந்தும் தரையிலிருந்தும் சிலர் எழுந்து நின்று “தலைவரைப் பிரேரேபிக்க வேண்டும்” என்று கூச்சல் போட்டார்கள். “தலைவர் பிரேரணை இல்லாமல் ஆர். கே. சண்முகம் பேசக் கூடாது” என்றார்கள். முத்தமிழ் நுகர்வோர் சங்கத்தாரால் முன் கூட்டியே திட்டமிட்டு டிக்கட் வாங்கிக் குழப்பம் செய்ய வந்த கூட்டம் இது. தலைவரைப் பிரேரேபித்ததும் எழுந்து நின்று கூச்ச லிட்டார்கள். உடனே மேடைமீது நின்ற சின்னண்ணா டி. கே. முத்துசாமி ஒலிபெருக்கி முன்னல் வந்து எழுந்து நின்றவர்களை உட்காரும்படி கையமர்த்தியப்படி,

‘அன்பர்களே, மகாநாட்டின் தலைவர் சர். ஆர். கே.சண்முகம் செட்டியார் என்பதை அழைப்பிதழில் தெளிவாகப் போட்டிருக்கிறோம். விளம்பரச் சுவரொட்டிகளிலும் தலைவர் பெயர் இருக்கிறது. அதன் பிறகு, இங்கே தலைவரை ஒருவர் பிரேரேபிக்கவும், மற்றொருவர் ஆமோதிக்கவும் வேண்டுமென்ற அவசியம் இல்லை. வெறும் சடங்குதான். முற்போக்காளர்கள் அதிகமாகப் பங்கு பெறும் இந்த மகாநாட்டில் பழைய மூட நம்பிக்கைச் சடங்கெல்லாம் தேவையில்லையென்று தான் தலைவர் பிரேரேணையை நிறுத்தி விட்டோம். அமைதியாக உட்காரும்படி கேட்டுக் கொள்கிறேன். தலைவர் அவர்கள் பேசுவார்” என்று கூறினார்.

பெரும்பாலான ரசிகப் பெருமக்கள் “உட்கார், உட்கார்” என்று, எழுந்து நின்ற கூட்டத்தை உட்காரச் செய்தார்கள். சுமார் பத்துப்பேர் மட்டும் முணுமுணுத்துக் கொண்டு வெளியே சென்றார்கள். கூட்டத்தில் அமைதி ஏற்பட்டது. தலைவர் சொற்பொழிவாற்றினார். அதன் சுருக்கத்தை மட்டும் இங்கு தருகிறேன்.