பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

449


“நண்பர்களே, நகரசபைத் தலைவர் அவர்களே, அங்கத்தினர்களே, நமது நாட்டிலே நாடகக்காரர்களைக் கூத்தாடிகள் என்று கேலியாகப் பேசுகிறார்கள். மேனாடுகளிலே அவர்களைப் பாராட்டுகிறார்கள். நகரசபைகள் நாடகக் கலைக்காக உதவி செய்கின்றன. மேடுைகளில் காணப்படும் பெரிய தியேட்டர்கள் நகர சபைகளுக்குச் சொந்தமானவைகளே. பாரீஸ் பட்டணத்திலுள்ள பெரிய அருமையான நாடகக் கொட்டகை அந்த ஊர் நகர சபையின் சொந்தக் கட்டிடம். அதுபோலவே மேனாடுகளிலே மற்ற இடங்களிலும் நாடகக் கொட்டகைகள், நாட்டிய சாலைகள் எல்லாம் நகரசபைகளுக்குச் சொந்தம். இனி இங்கும் நகரசபைகள் நாடகக் கலைக்கு ஆதரவு தருமென்று நம்புகிறேன்.

நாடகக் கலையென்பது நமது தமிழ்நாட்டிலே பழமையானது. 2000 ஆண்டுகட்கு முன்பும் இருந்தது. ஆனால் இன்று சிலர் நாடகம் என்ற சொல் கூடத் தமிழல்ல, சமகிருதம் என்று கருதுகிறார்கள். நாடகம் என்ற சொல் நடை என்ற தமிழ்ச் சொல்லின் கருத்தைக் கொண்டது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்திலே நாடகக்கலை இருக்கிறது.

பழங்காலத்திலே நாடகங்களை மூன்று வகையாகப் பிரித்திருந்தார்கள். ஒன்று பக்தி ரசமான புராணக் கதைகள். இவைகளைக் கோவில்களிலே நடத்திவந்தார்கள். மற்றொன்று வீரர் கதைகள். இவை அரசர்கள் முன்னிலையிலே மாளிகைகளிலே நடிக்கப் பட்டன. மூன்றாவது அறிவு வளர்ச்சிக் கதைகள். இவைகளே மக்கள் முன்னிலையில் நடத்தி வந்தார்கள். இப்பொதோ நாடகங்கள் யாவும் புராணக் கதைகளாக உள்ளன.அவைகளைப்பார்க்கும். போது கஷ்டமாகத்தானே இருக்கிறது. புதிய கருத்துள்ள சீர் திருத்த நாடகங்கள் நடத்த வேண்டும்.

“பழங் காலத்திலிருந்து வளர்ந்து வரும் இந் நாடகக் கலையை அபிவிருத்தி அடையச் செய்யவே இன்று இந்த மகாநாடு நடைபெறுகிறது.”[1]


  1. தலைவர் சண்முகம் அவர்களி தலைமைப் பேருரை முழுவதும் ‘சங்கரதாஸ் சுவாமிகள் மன்றம்’ வெளியிட்டுள்ள ‘நாடக உலகில் அண்ணா’ என்னும் தனி நூலில் உள்ளது.