பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

450


தலைமைப் பேருரை முடிந்ததும் எம். என். எம். பாவலர் அவர்கள் தமிழ்நாடகத் தலைமையாசிரியர் தவத்திரு தூ.தா சக்கரதாஸ் சுவாமிகளின் திருவுருவப் படத்தினைத் திறந்து வைத்தார். தமிழ் நாடகத் துறை வளர்ச்சியில் சுவாமிகளுக்கிருந்த முதன்மையை விரிவாக விளக்கி நீண்டதொரு சொற்பொழிவு நிகழ்த்தினார். அதனையடுத்துச் சமுதாயச் சீர்திருத்த நாவல் நாடகாசிரியர் திரு எம். கந்தசாமி முதலியார் அவர்களின் திருவுருவப் படத்தினை அடியேன் திறந்து வைத்து, அந்த மறுமலர்ச்சி நாடகப் பெருந்தகையின் தனிச் சிறப்புக்களையும் நடிப்பினைப் பயிற்றுவிப்பதில் அவருக்கிருந்த ஆற்றலையும் எடுத்து விளக்கினேன்.

இத்துடன் காலை நிகழ்ச்சிகள் பகல் 1 மணிக்கு முடிந்தன. பகல் உணவுக்குப் பின் மாலை 4 மணிக்கு மாநாடு தொடர்ந்து நடைபெற்றது. நாடகக் கலையரசு நவாப் டி. எஸ். ராஜமாணிக்கம் பிள்ளை, நாடகமும் அதன் பயனும் என்னும் தலைப்பில் பேசினார். அவரது நீண்ட சொற்யொழிவின் சுருக்கம் வருமாறு:

“அறிவிற் சிறந்த தலைவர் அவர்களே, அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,

அரிய பெரிய நூல்களைப் படிப்பதற்கு அவகாசம் இல்லாதவர்களுக்கும், படிக்கத் தெரியாதவர்களுக்கும் நல்லறிவு புகட்டவே நாடகம் ஏற்பட்டது. இயல்-இசை-நாடகம் என்னும் முத்தமிழுள் இயலும் இசையும் படித்தாலும் கேட்டாலும் மாத்திரமே இன்பம் தரும். நாடகமோ, அந்த இரண்டு இன்பங்களோடு காண்பதற்கும் இன்பம் தரும்.

உயர்ந்த வேடங்கனைத் தரித்து மெய் மறந்து நடிக்கின்றவர்களுடைய உள்ளங்களில், மேற்படி பாத்திரங்களின் உயர்ந்த நற்குணங்கள் படிவது இயற்கை, இந்தக் குணங்கள் நாளடைவில் மிகுவதால் அந்த நடிகர்கள் தெய்வீகத் தன்மையை அடைகின்றனார்.

நம்நாட்டில் நல்வழி புகட்டும் நூல்களை மூன்று வகையாகப் பிரித்திருக்கிறார்கள். அவை 1, வேதங்கள் 2, புராணங்கள் 3, நாடகம் முதலிய காவியங்கள்.