பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மூன்று இலக்கிய நாடகங்கள்

ஈரோடு ரசிகப்பெருமக்கள் அளித்தபேராதரவுஎங்களுக்கு மிகுந்த உற்சாகம் ஊட்டியது. அந்த உற்சாகத்தில் மூன்று இலக்கிய நாடகங்கள் தயாராயின.மூன்றையும் வரலாற்று நாடகங்களாகவே குறிப்பிடலாம். ஒன்று மராத்தி நாடகத்தின் தழுவல், மற்றொன்று தமிழ்க்கவியரசரின் வாழ்க்கைச்சித்திரம். மூன்றாவது வட மொழிக் கவிஞரின் வரலாறு. இம் மூன்று நாடகங்களில் இருநாடகங்கள் நாடகக் கலை மாநாட்டுக்குப் பின்னும், ஒரு நாடகம் மாநாட்டுக்கு முன்னும் நடைபெற்றன. மூன்று நாடகங்களும் நாடகக் குழுவின் தரத்தினை உயர்த்தியவென்றே சொல்ல வேண்டும்.

வீர சிவாஜி

வீர சிவாஜி நாடகம் 1944 ஜனவரி 1 ஆம் தேதி அரங்கேறியது. இந்நாடகம் பாலக்காட்டில் இருந்தபோதே எங்களுக்குக் கிடைத் தது. தஞ்சை டி. வி. இரத்தினசாமி அவர்களால் எழுதப் பெற்ற நாடகம். நாடக அமைப்பு மிக நன்றாயிருந்தது. உரையாடல்கள் நல்ல தமிழில் இலக்கிய நயத்துடன் எழுதப் பெற்றிருந்தன. நாடகத்தின் இடையே வரும் காதல் காட்சிகளைத் திருக்குறள் காமத்துப் பாலிலுள்ள சில குறள்பாக்களே அடிப்படையாக வைத்துச் சிறப்பாக எழுதியிருந்தார் ஆசிரியர். சிவாஜியின் நேர் மையையும் நெஞ்சுறுதியையும் விளக்கிக் காட்டும் நாடகம் இது. இந்நாடக ஆசிரியர் இதனை மராத்தி நாடகத்தின தழுவல் என்று முன்பே கூறியிருக்கலாம். அதனால் அவருடைய திறமை உறுதியாக மேலும் உயர்ந்திருக்கும். அதற்கு மாறாக, ஆசிரியர் ரத்தின சாமி இந்நாடகம் என் சொந்தக் கற்பனையென்று தேவையற்ற ஒரு பொய்யைச் சொல்லி விட்டார். கெட்டிக்காரன் புளுகுக்கும் எட்டு நாட்கள்தானே கணக்கு வைத்திருக்கிறார்கள்!